Saturday, 5 March 2016

ஆறாது சினம் – விமர்சனம்


அவசரக் கோலத்தில் கண்ட படங்களிலும் நடித்து காணாமல் போகாமல் கமிட் பண்ணுகிற ஒவ்வொரு படத்தையும் ஏதாவதொரு வித்தியாசமான கதையம்சத்தோடு இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார் ஹீரோ அருள்நிதி. மெளனகுரு, டிமாண்ட்டி காலனி என அவர் நடிக்கின்ற படங்கள் எல்லாமே ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு கேரண்டி தந்தவை. அந்த வகையில் இந்த படமும் இன்னொரு வித்தியாசமான கதையம்சத்தோடு வந்திருக்கிறது.

மலையாளத்தில் பிரிதிவிராஜ் நடித்து ஜூத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு ரிலீசான ‘மெமரீஸ்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆறாது சினம். ‘ஈரம்’, ‘மெல்லினம்’ வெற்றிப் படங்களை கொடுத்த அறிவழகன் இயக்கியிருக்கிறார்.

தான் சார்ந்த காவல்துறையில் சின்சியராக வேலை செய்ய அதனால் தன் குடும்பத்தையே இழந்து அந்த சோகத்தில் எந்நேரமும் ‘குடி’மகனாக மட்டுமே இருக்கும் ஹீரோவை மீண்டும் அதே போலீஸ் துறை அவரது தொழில்திறமையைப் பயன்படுத்தி இயல்பு வாழ்க்கைக்கு மாற்றுவதே படத்தின் மெயினான சமாச்சாரம்.

மதுரையில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் அருள்நிதிக்கு அந்த ஏரியாவில் ஆட்டம் போடும் ரவுடி ஒருவனை எண்கவுண்ட்டரில் போட்டுத் தள்ள ஆர்டர் வருகிறது. அவனை நெருங்கவும் மேலிடத்தின் உத்தரவால் ரவுடி தப்பித்து விடுகிறான். இருந்தாலும் அந்த துப்பாக்கி சண்டையில் ரவுடியின் மனைவி இறந்து விட, கர்ஜிக்கும் வில்லன் பதிலுக்கு அருள்நிதியின் மனைவி நாயகி ஐஸ்வர்யா ராஜேஷையும், அவரது மகளையும் சுட்டுக் கொல்ல முயற்சிக்கும் போது இருவரும் இறந்து போக, கூடவே வில்லனும் அருள்நிதியின் குண்டுக்கு இறையாகி இறந்து விடுகிறான்.

அன்பான மனைவியையும், குழந்தையையும் இழந்த துக்கத்தில் போலீஸ் வேலைக்குச் செல்லாமல் குடியே கதியென்று கிடப்பவரை மீண்டும் உயர் போலீஸ் அதிகாரியான ராதாரவி கூப்பிட்டு ஒரு தொடர் கொலைகள் தொடர்பான வழக்கை விசாரிக்கச் சொல்லி அவரிடம் ஒப்படைக்கிறார்.

முதலில் மறுத்தாலும் அம்மாவின் வற்புறுத்தலுக்காக அந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார். அந்த நூலைப் பிடித்து அடுத்தடுத்து கொலை செய்பவனை நெருங்க நெருங்க பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வருகிறது. பின்னர் சாதூர்யமாகி கொலைகாரனை நெருங்கி அதன் பின்னணியில் உள்ளவனை கண்டுபிடிப்பதும், அந்த தொடர் கொலைக்கான காரணத்தையும் வெளி உலகுக்கு அம்பலப்படுத்துவதுமே கிளைமாக்ஸ்.

தனக்கு தோதான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் படு கில்லாடியாக இருக்கிறார் அருள்நிதி. அதிலும் அவருடைய உசரத்துக்கு இந்த போலீஸ் கேரக்டர் செம பொருத்தம்!

கண்முன்னே மனைவியும், குழந்தையும் ரவுடியால் கொல்லப்படும் போது பின்னாலில் அந்தக் காட்சிகள் கண்ணை விட்டகழாமல் அடிக்கடி ஞாபகத்தில் வந்து போக அவர்கள் நினைவிலேயே வாழ்வது போலீசுக்கும் மனசு இருக்குங்க என்று சொல்ல வைக்கிறது!

அருள்நிதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும், தினகரன் பத்திரிகை நிருபராக ஐஸ்வர்யா தத்தாவும் வருகிறார்கள். முழுக்கதையும் அருள்நிதியையே சுற்றிப் பின்னப்பட்டிருப்பதால் இரண்டு பேருமே படத்தில் கருவேப்பிலை தான்!

போலீஸ் உயர் அதிகாரியாக வருகிறார் ராதாரவி, நல்ல மனசுக்காரராகவும் இருக்கிறார். அருள்நிதியின் கூடவே வரும் சார்லி பேசும் சில வசனங்கள் கூட சிரிப்பை வரவைக்கின்றன. ஆனால் காமெடிக்கென்றே நேர்ந்து விடப்பட்ட ரோபோ சங்கர் பேசும் வசனங்களில் துளிகூட காமெடி இல்லை. ஏதோ ஒப்புக்கு சப்பாகவே அவரையும் படத்தில் ஒரு போலீசாக உலவ விட்டிருக்கிறார்கள். ஏம்பாஸ் ‘மாரி’யில பட்டையை கெளப்பியிருந்தீங்க, என்னாச்சு..?

தமனின் பின்னணி இசையில் ஒரு க்ரைம் படத்துக்கான டோன் கிளைமாக்ஸ் வரை சிறப்பாக அமைந்திருக்கிறது. அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் நைட் எபெக்ட் காட்சிகள் அற்புதம்!

படம் முழுக்க கையில் சரக்கும் கையுமாகவே வருகிறார் அருள்நிதி. மனைவி, குழந்தைகளை இழந்த துக்கத்தை எப்போதுமே டாஸ்மாக் சரக்கை குடித்துத்தான் ஆற்றிக்கொள்ள வேண்டுமா என்ன? அந்தக் காட்சிகளுக்கு வேறுமாதிரி யோசித்திருக்கலாம்.

சைக்கோ கில்லராக வருபவரின் முகத்தை காட்டாமல் கடைசி காட்சியில் அந்த சஸ்பென்ஸை உடைக்கிறார் இயக்குநர். அதுவரை அந்த கொலைகாரன் யாராக இருக்கும் என்கிற ரசிகரின் எதிர்பார்ப்பை நொடிக்கு நொடிக்க ஒருவித பதட்டைத்தை வைத்து ஹார்ட் பீட்டை எகிற வைத்திருக்கிறார்.

ஓப்பனிங்கில் வரும் நீளமான என்கவுண்டர் காட்சி இதுவும் வழக்கமான போலீஸ் படம் தானா? என்கிற கேள்வியை எழுப்ப அடுத்தடுத்த காட்சிகளில் ‘டேக்-ஆப்’ ஆகிறது அறிவழகனின் பிசுறு தட்டாத விறுவிறுப்பான திரைக்கதை!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...