Saturday, 5 March 2016

போக்கிரி ராஜா – விமர்சனம்


”தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்” என்ற வித்தியாசமான கதைக்களத்துடன் கூடிய வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பாவின் இரண்டாவது படம்.


தானும் கொட்டாவி விட்டு கூட வேலை பார்ப்பவர்களையும் கொட்டாவி விட வைத்து சில நிமிடங்களிலேயே தூங்க வைத்து விடுவார் ஜீவா. இதனால் எந்த கம்பெனிக்கு வேலைக்குப் போனாலும் அதையே காரணம் காட்டி அவரை துரத்தியடிக்கிறார்கள்.


அப்படி ஒரு கம்பெனியில் அறிமுகமாகும் ஹன்ஷிகாவின் காதலும் தடைபட, துரத்தியடிக்கும் கொட்டாவியை துரத்த டாக்டரிடம் சிகிச்சைக்காக போகிற போது தான் தெரிகிறது அது கொட்டாவி அல்ல! எதிரில் நிற்பவரை ஊதித் தள்ளுகிற அளவுக்கு சக்தி வாய்ந்த காற்று என்கிற உண்மை!!!


இதற்கிடையே பொது இடங்களில் உச்சா போகிறவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து வித்தியாசமான சமூக சேவை செய்யும் ஹன்ஷிகாவிடம் ஜீவாவும் மாட்டிக்கொள்ள தன்னோடு சேர்ந்த இந்த வேலையைச் செய்யச் சொல்கிறாள். அதே ஏரியாவில் பெரிய ரவுடியாக வரும் சிபிராஜூம் பொது இடம் ஒன்றில் உச்சா போகும் போது அவர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து விட அவமானப்படும் சிபிராஜ் ஜீவாவை கொலை செய்ய விரட்டுகிறார்.


தன்னிடம் இருக்கும் அந்த காற்று சக்தி மூலம் எப்படி சிபிராஜிடமிருந்து தப்பிக்கிறார். அப்படி ஒரு அபூர்வ சக்தி ஜூவாவுக்கு எப்படி வந்தது? அதன் பின்னணி என்ன? அந்த கொட்டாவியால் ஏற்படுகிற மற்ற பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே கிளைமாக்ஸ்.


ஜீவாவின் 25-வது படம் என்கிற பெருமையோடு வந்திருக்கிறது படம். இன்னும் 25 வருஷம் ஆனாலும் அவரிடமிருக்கும் ‘ஜாலியான பேர்வழி’ எனர்ஜி லெவல் மட்டும் இம்மியளவும் குறையாது போலிருக்கிறது! அந்த எனர்ஜி லெவலை கொஞ்சமும் குறைவில்லாமல் இதிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதே சமயம் மற்ற படங்களில் இருப்பது போல இதில் ரிஸ்க் எடுத்து நடிக்கிற வேலை சுத்தமாக இல்லை. அடிக்கடி கொட்டாவி விடுகிறார். அதிகபட்சம் அவர் செய்யும் சாகசமே இதுதான். அந்தளவுக்கு மிகவும் லேசான கதாபாத்திரம்.


வில்லனாக வரும் சிபிராஜை திரையில் காட்டும் போதெல்லாம் இசையமைப்பாளர் டி.இமான் ”ரபரபரபரப…. ரபரபரபரப….” வென்று பிண்ணனி இசையை பெரிய பில்டப்புடன் கொடுத்திருக்கிறார். அவர் செய்யும் வில்லனத்தனத்தில் அப்பா சத்யராஜின் மேனரிசங்களை அப்படியே வெளிப்படுத்துகிறார். சொல்லப்போனால் சின்ன வயசில் சத்யராஜ் வில்லத்தனம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி?


விடாமல் கொட்டாவி விடுவது ஜீவாவின் உயிரை பறிக்கக் கூடிய நோய் போல இடைவேளைக்கு முன்புவரை காட்டி விட்டு, இடைவேளைக்குப் பிறகு அதை அபூர்வ சக்தியாக பரம்பரை வழியாக வந்தது என்று மாற்றுவது பெருத்த ஏமாற்றம்.


குல்பி ஐஸ் போல குளுகுளு நாயகியாக வருகிறார் ஹன்ஷிகா. ஒரு சமூக சேவகியாக பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது தண்ணீர் அடித்து அவர்களை விரட்டுவது தான் முழு வேலை. அவ்வப்போது ஜீவாவை காதலிக்க சில காட்சிகள். அருகில் யார் இருந்தாலும் கொட்டாவி விட்டு அவர்களை தூங்க வைத்து விடும் ஜீவா ஹன்ஷிகா இருக்கும் போது மட்டும் கொட்டாவி விட மறந்து விடுவது ஆச்சரியம்!


கொட்டாவி என்கிற ஃபேண்டஸி மேட்டரை நகைச்சுவை கலந்து தர முயற்சித்திருக்கும் இயக்குநர் அதற்கான நடிகர், நடிகர்கள் தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.


குறிப்பாக மயில்சாமியை வைத்தெல்லாம் இன்னும் சில காட்சிகள் காமெடியை களைகட்ட வைத்திருக்கலாம். சிபிராஜூன் அடியாளாக வரும் முனீஸ்காந்த் செய்யும் சேட்டைகளும், ஜீவாவின் நண்பனாக வரும் யோகிபாபுவும் அந்தக்குறையை சரி செய்கிறார்கள்.


டி.இமானின் இசையில் பாடல்கள் குத்தாட்டம் போட வைக்கின்றன. குறிப்பாக ”அத்து வுட்டா அத்து வுட்டா,” ”பப்ளி பப்ளி” பாடல் யூத்துகளின் ரிங்டோன் ரகம்.


பின்னணி இசையில் அதிகப்படியான இரைச்சல் சத்தத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.


தமிழ்சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கொட்டாவி மேட்டரை காமெடி கலந்து தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. என்ன முதல் படத்தில் இருந்த ”டெடிகேஷன்” இதில் கொஞ்சம் ”அவசர அடி ரங்கா”வாக மாறியிருக்கிறது.


இப்படி ஒரு கொட்டாவி கதைக்கு ஏன் டைரக்டர் ”போக்கிரி ராஜா” என்ற டைட்டிலை தேர்ந்தெடுத்தார் என்கிற ரகசியம் படத்தின் கிளைமாக்ஸ் வரை புரியவில்லை. மற்றபடி குழந்தைகளோடு சென்று ஜாலியாக ரசித்து சிரிக்க தோதான படம் தான் இந்த ”போக்கிரி ராஜா.”

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...