Tuesday, 12 April 2016

ரசிகர்களின் அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் - சூர்யா உருக்கம்


‘மாஸ்’ படத்தைத் தொடர்ந்து மாஸ் ஹிட்டுக்காக காத்திருந்த சூர்யாவுக்கு புடம் போட்ட தங்கமாக கிடைத்திருக்கிறார் விக்ரம் கே.குமார். தமிழில் ‘யாவரும் நலம்’, தெலுங்கில் ‘மனம்’ என இரண்டு மெகா ஹிட்டுகளுக்கு சொந்தக்காரர். இப்போது ’24’ படத்தின் இயக்குநர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்பதால் இப்படத்தின் ஆடியோவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பு இன்று காலை நிறைவேறியது.

24 படத்தின் ஆடியோ ரிலீஸ் இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர் சூர்யாவின் பேச்சு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் உருக்கமாகவும், எளிமையாகவும் இருந்தது. ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்துக்கு மத்தியில் பேசிய அவர் படத்தைப் பற்றி பேசியதை விட தனது ரசிகர்களைப் பற்றியே அதிக அக்கறையோடு பேசினார்…

”படத்தோட ட்ரெய்லரை பார்த்து விட்டு நீங்கள் அனைவரும் கொடுத்த வரவேற்பு எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. நாங்கள் உழைத்த உழைப்புக்கான பலன் இது. வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு அழகான பாதையை அமைத்து கொடுத்தது ரசிகர்களாகிய நீங்கள் தான். கடந்த மூன்று வருடங்களாக நான் உங்களை சந்திக்க முடியவில்லை. தொடர்ந்து படங்களை தயாரிப்பதால் சென்னையிலேயே இருக்க நேரம் கிடைப்பதில்லை. அதனால் உங்களையும் சந்திக்க முடியவில்லை. அது எனக்கே கொஞ்சம் குற்ற உணர்வாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் அதையெல்லாம் நீங்கள் மனசுக்குள் வைத்துக் கொள்ளாமல் என்னுடைய வெற்றிக்காகவும், இந்தப் படத்தின் வெற்றிக்காகவும் காலை எட்டு மணிக்கே வந்து விட்டீர்கள். உங்களின் இந்த அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.

“சரியான படம் பண்ணினால் அந்தப் படத்தை வெற்றி பெற வையுங்கள், தப்பான படத்தில் நான் நடித்தால் அந்தப் படத்தை நீங்கள் வெற்றிப் படமாக்க வேண்டாம். பரவாயில்லை. ஏனென்றால் அப்படி தப்பான படங்களை நீங்கள் ஆதரிக்காமல் இருந்தால் தான், நாங்கள் நல்ல கதையை தேடிப்பிடித்து நடிக்க முடியும். அப்போது தான் உங்களுக்கும் நல்ல படங்கள் பார்க்கக் கிடைக்கும்.

என்றவரின் பேச்சு இயக்குநர் விக்ரம்குமார் பக்கம் திரும்பியது, விக்ரம் குமார் மிகச்சிறந்த இயக்குநர், 20 வயதிலேயே ஒரு குறும்படம் எடுத்து விருதுகளை வாங்கியவர். அதன்பிறகு மனம், யாவரும் நலம் என அவர் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தவர். ஜெயிப்பதற்கு மொழி ஒரு தடையில்லை. இந்த மொழியில் தான் படம் பண்ணுவேன் என்றில்லாமல் வாய்ப்பு எங்கு அமைகிறதோ அங்கு நான் வெற்றி பெறுவேன் என்கிற தன்னம்பிக்கை உள்ளவர். இதே தன்னம்பிக்கை எனது ரசிகர்களாக உங்களுக்குள்ளும் இருக்க வேண்டும்.

அவர் என்னிடம் இந்தப் படத்தின் கதையை நான்கு மணி நேரம் சொன்னார். நான் கதை கேட்டு கை தட்டி ரசித்தேன். அந்தளவுக்கு அது என்னைக் கவர்ந்திருந்தது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சார் தான் இசையமைப்பாளராக வேண்டும் என்று முடிவான போது படத்தின் கதையை கேட்க வேண்டும் என்று இசைய்புயல் ஏ. ஆர். ரஹ்மானிடம் நான் கூறியதும், முதலில் அரைமணி நேரம் கதை கேட்க நேரம் ஒதுக்கியவர் பின்னர் கதை பிடித்து போய் ஆறு மணி நேரம் கேட்டார். இப்படம் ஒரு லட்சிய படைப்பு என்று இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் கதையை விவரித்து முடித்தவுடன் என்னிடம் கூறினார். ஏ.ஆர்.ரஹ்மானிடம் நாம் எந்த ஒரு விஷயத்தையும் பேசலாம் அவர் மிகப்பெரிய உச்சங்களை தொட்டும் எளிமையாக இருக்கிறார். எல்லோருக்கும் ஒரே மாதிரியான மரியாதையை தருபவர்.

என்ற சூர்யா தனது ரசிகர்களாக இதை சொல்லியே ஆக வேண்டுமென்று பேச்சை தொடர்ந்தார்… சமீபத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் கேள்வித்தாளை பார்த்ததுமே தற்கொலை செய்து கொண்டதை பற்றி நான் தெரிந்து கொண்டதும் நான் மிகவும் வருந்தினேன். முன்பெல்லாம் ரிசல்ட் வந்தபிறகு தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும். ஆனால் இப்போது அதற்கு முன்பாகவே இப்படி ஒரு முடிவை எடுக்கிறார்கள். தயவு செய்து யாரும் அவ்வாறு செய்ய வேண்டாம். எல்லோருக்கும் நேரம் இருக்கு. எல்லோருக்கும் நேரம் வரும். நானெல்லாம் ஒன்றும் தெரியாமல் ஒரு டம்மி பீஸ் போலத்தான் இருந்தேன். ஆனால் நான் இங்கு இப்படி நின்று பேசுவதற்கு காலம் தான் கை கொடுத்தது. என்னைப்போலவே உங்களுக்கும் சரியான நேரம் வரும். அதுவரை காத்திருங்கள். என்றவர் 24 படத்தின் முக்கியமான ரகசியம் ஒன்றையும் சொன்னார்.

ஆமாம், இந்தப் படத்தில் முதன் முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கிறாராம் சூர்ய்

அப்போ சூர்யா ரசிகர்களுக்கு ட்ரிபுள் ட்ரீட்!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...