Thursday, 2 June 2016

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் மகாகவி பாரதி. அழிக்க வேண்டாம், அன்போடு அதை செய்து முடிப்போம் என்கின்றனர் ஃபுட் பேங்க் டீம். வாழ்த்துக்கள்.

மனிதர்கள் பணமின்றி வாழலாம், வீடில்லாமல் வாழலாம், சுற்றமும் நட்பும்
யாருமின்றி வாழலாம், சகல வசதிகள் ஏதுமின்றி வாழ்க்கையை கடக்கலாம். ஆனால்
உணவின்றி ஒருபோதும் வாழ்ந்து விடமுடியாது. நம் ஊரில் தினம் ஒரு வேலை
உணவுண்டு வாழ்பவர்கள் இருக்கிறார்கள், சில நாள் உணவில்லாமல் வாழ்பவர்கள்
இருக்கிறார்கள், நெடுநாள் உணவின்றி இறந்தவர்களும் இருக்கிறார்கள். இதை
கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற எல்லோரும் நினைப்பார்கள். சில பேரே செயலில்
காட்டுவர். அந்த சில பேர் தான் சென்னையை சேர்ந்த இளம் பெண்மணி ஸ்னேஹா
மோகன்தாஸ் மற்றும் அவரது  ஃபுட் பேங்க் அமைப்பு.

முதல் நாள் சைதாபேட்டையில் அவரது வீட்டருகே ஒரு சாலையோரம் இருந்தவருக்கு
உணவு கொடுத்தார் ஸ்னேஹா. அடுத்த வாரம் நண்பர்கள் ஐந்து பேருடன் அருகில்
இருந்த ரயில் நிலையத்தில் வசிக்கும் பத்து பேருக்கு உணவு கொடுத்தார்.
பசியில் தவித்தவர்கள்  உணவு பொட்டலங்களை வாங்கியபோது, நன்றி கலந்த
வணக்கங்களை செலுத்திய போது, அவர்களது பசியை போக்கியதும், கண்ணீர் துளிகளை
ஏங்கியதும் இவர்களுக்கு மறக்க முடியாத தருணமாம். அன்று தொடங்கிய இவர்களது
பயணம் இன்று சென்னையில் அண்ணாநகர், வேளச்சேரி, அம்பத்தூர் உட்பட பல
பகுதிகளில் மட்டுமில்லாமல், கோயம்புத்தூர், ஹைதராபாத், நிசாமாபாத், புனே
என நிறைய நகரங்களில் கிளைகள் கொண்டு செயல்படுகிறது. பள்ளி செல்லும்
சிறுவர்கள் முதல், கல்லூரி மற்றும் வேலை செய்யும் இளைஞர்கள் உள்ளிட்டு,
பெரியோர்கள் வரை  ஃபுட் பேங்க் அமைப்புகளில் சேர்ந்து மனதார சேவை செய்து
கொண்டு இருக்கிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால், உணவுகள் அனைத்தும்
வீட்டிலே செய்யப்படுகிறது. கடைகளிலும், உணவகங்களிலும் வாங்குவதில்லை.
ஆரோக்கியமான உணவை மட்டும் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக
இருக்கிறார்கள் ஸ்நேஹா & டீம். *ஹேட்ஸ் ஆ ஃப்*

சமீபத்தில் மே 28ம் தேதி நடந்து முடிந்த 'வேர்ல்ட் ஹங்கர் டே' அன்று
இவர்கள் செய்த சாதனை மிக சிறப்பானது. ஒரு மாதம் முன்னரே கூட்டங்கள் கூடி,
கலந்து ஆலோசித்து, சமூக வலைதளங்களில் உறுதிமொழி ஏற்று, (அதாவது ஹங்கர் டே
அன்று எத்தனை பேருக்கு உணவளிப்பீர்கள் என்று செல் ஃபி எடுத்து
ஃபேஸ்புக்கில்  ஃபோட்டோ போட்டு குறைந்தது ஐந்து நபர்களை கலந்துக்க
செய்யுமாறு ஒரு உறுதிமொழி), என பல புதுமையான சிந்தனைகளை
உருவாக்கினார்கள். அதன் பலன் மிக சிறப்பாக கிடைத்தது. சென்னை,
கோயம்புத்தூர் மட்டுமில்லாமல், சிங்கப்பூர், மலேசியா, துபாய், என்று
உலகில் பல இடங்களில் மக்கள் தங்களால் முடிந்த அளவிற்கு உணவளிப்போம் என்று
உறுதி ஏற்றனர். அதன்படியே செய்தும் முடித்தனர்.

"நைன் டு நைன்  ஃபுட் டிரைவ்".
மே 28, சனிக்கிழமை, சென்னை பெசன்ட் நகரில் எலியட்ஸ் கடற்கரையில் காலை
ஒன்பது மணிக்கு தொடங்கியது இவர்களது பங்களிப்பு. நாடகம் மற்றும் நடனங்கள்
மூலமாக பசியின் கொடுமைகளையும், உணவின் முக்கியத்தையும் பொதுமக்களுக்கு
எடுத்து கூறினர். மணல் சிற்பம் மூலமும் செய்து காட்டினர். நகரின் பல
பகுதிகளில் இருந்து பெரும்பாலனோர் கலந்து கொண்டனர் தங்களுடைய வீடுகளில்
செய்த உணவு பொட்டலங்களோடு. காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை
நடைபெற்றது இந்த உணவளிக்கும் செயல். நகரின் அனைத்து பகுதியிலும்
சாலையோரம் வசிப்பவர்கள் முதல் பசியால் வாடியோர் அனைவருக்கும் உணவுகள்
வழங்கப்பட்டது. இந்தியா முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேலான உணவு
பொட்டலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது(வாவ்!). சென்னை நகரில் மட்டும்
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஹைதராபாதில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள்
கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் சொல்கிறது  ஃபுட் பேங்க் டீம்.

இத்துடன் நாங்கள் நிறுத்த போவதில்லை, தொடர்ந்து இது நடைபெறும் என்றும்,
முழுமையாக என்று பசியும், பட்டினியும் மறைகிறதோ அன்றே எங்களுக்கு வெற்றி
என்றும் கூறிவிட்டு வழக்கம்போல் ஆதரவற்றோர்க்கு உணவளிக்க சென்றார்  இந்த
இருபத்திமூன்று வயதான அக்ஷய பாத்திரம் செல்வி ஸ்நேஹா மோகன்தாஸ்.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்
என்றான் மகாகவி பாரதி. அழிக்க வேண்டாம், அன்போடு அதை செய்து முடிப்போம்
என்கின்றனர்  ஃபுட் பேங்க் டீம். வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...