Saturday, 16 July 2016

கல்வியை தொழிலாக அல்லாமல் சேவையாக பார்த்தவர் லியோ முத்து - கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் பாராட்டு


சாய்ராம் கல்விக்குழுமங்களின் நிறுவனர் திரு.எம்.ஜெ.எப். லயன் லியோ முத்து அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று, (ஜூலை 10), ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் திரு.லியோ முத்துவின் திருவுருவச் சிலை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைப்பெற்றது.

இந்த நிகழ்வில் சாய்ராம் குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து, லியோமுத்து அவர்களின் துணைவியார் திருமதி.கலைச்செல்வி லியோமுத்து, மகள் சர்மிளா ராஜா, டிரஸ்டி, அவரது குடும்ப உறுப்பினர்கள். ஆர்.எம்.கே கல்வி நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.எஸ்.முனிரத்தினம், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், ஜெயா கல்வி குழுமத்தின் நிறுவனர் டாக்டர்.ஏ.கனகராஜ், நடிகர் மயில்சாமி, முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், மக்கள் தொலைக்காட்சியின் பாஸ்கர் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டார்கள்.

இந்த நிகழ்வையொட்டி 1300 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், அன்றைய தினம் முழுவதும் அக்குழந்தைகள் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் உணவு உண்டு, விளையாடி, மகிழ்ச்சியாக இருக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தனது வாழ்நாளில் பல்வேறு சமுதாய நலத்தொண்டுகளை செய்து வந்த லியோமுத்துவைப் பின்பற்றி, அவரது மகனும், சாய்ராம் கல்வி குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியுமான சாய்பிரகாஷும், பல்வேறு சமுதாய நலத்தொண்டுகளை செய்து வருகிறார். அதன்படி, லியோ முத்து அறக்கட்டளை சார்பாக 2014 -15 ஆண்டில் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையாக ரூ.27,15,000 வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது 2015-2016 ஆண்டிற்கான உதவித்தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடத்தும் அகரம் அறக்கட்டளையின் சார்பாக, கடந்த 4 ஆண்டுகளாக 50 மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டுள்ளது. இதில் இலவச தங்கும் வசதி உணவு பாடப்புத்தகங்கள் அனைத்தும் அடங்கும். மேலும், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, அவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி மையத்தின் கட்டிடம் அமைப்பதற்கு, மதுராந்தகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே, ஒரு ஏக்கர் நிலம் இலவசமாக அகரம் அறக்கட்டளைக்கு சாய்ராம் கல்வி குழுமம் வழங்கியுள்ளது. இது போல பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு சாய்ராம் கல்வி குழுமம் உதவி வருவதாகவும், இந்த பணிகள் மேலும் தொடரும், என்றும், சாய்பிரகாஷ் தெரிவித்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சாய்பிரகாஷ், “சாதனையாளர்களுக்கு மகனாக பிறந்தது ரொம்ப கஷ்ட்டமான விஷயம், ஏன் என்றால், அவர்கள் செய்த சாதனையை நாம் முறியடியக்க வேண்டும், அது நடக்குமா? என்பது கேள்விக்குறிதான். அப்படித்தான், எனது தந்தை லியோமுத்து அவர்களும் கல்வித் துறையில் பல சாதனைகளை புரிந்துள்ளார். பள்ளி முதல் பொறியியல் கல்லூரி வரை, பல்வேறு சாதனைப் புரிந்த அவர், சாய்ராம் கல்லூரியை, இந்தியாவில் சிறந்த 10 கல்லூரிகளில் ஒன்றாக கொண்டு வந்தார். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், அந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே கல்லூரி சாய்ராம் கல்லூரிதான். அடுத்த ஆண்டு அந்த இடத்தில் நாங்கள் இருப்போமோ? என்பது தெரியாது. அந்த அளவுக்கு எனது தந்தையின் உழைப்பு இருந்துள்ளது. அவர் இல்லாத இந்த ஒரு ஆண்டில் நான் ரொம்பவே கஷ்ட்டப்பட்டுவிட்டேன். அந்த நேரத்தில் எனக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்தும், நண்பராக இருந்தும் எனக்கு ஊக்கம் கொடுத்தவர், ஆர்.எம்.கே கல்வி நிறுவனத்தின் நிறுவனர் முனிரத்னம் அவர்கள் தான். இந்த நேரத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியை, குடும்ப நிகழ்ச்சியாக நடத்தலாமா அல்லது பொது நிகழ்ச்சியாக நடத்தலாமா, என்றே நான் குழம்பிவிட்டேன். இறுதியாக, எனது கல்லூரி ஊழியர்கள் கொடுத்த ஊக்கத்தின் பேரில், இப்படி ஒரு சிறப்பான விழாவாக நடத்தியுள்ளோம். இதற்கு வந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினருக்கும் எனது நன்றிகள்.

எப்போதும், அப்பா சொல்வார் கல்வியை வியாபரமாக மட்டுமே பார்க்ககூடாது, அதை சேவையாக பார்க்க வேண்டும் என்று, அப்படித்தான் சாய்ராம் கல்வி குழுமத்தில் நாங்கள் கல்வியை வியாபாரமாக பார்க்காமல் சேவையாக பார்க்கிறோம். இது ஒரு சேவை வியாபாரம் என்று சொல்லலாம். சிலர் 50 சதவீதம் சேவை, 50 சதவீதம் வியாபாரம் என்று பார்ப்பார்கள், ஆனால், நாங்கள் 75 சதவீதம் சேவையாகவும், 25 சதவீதம் தொழிலாகவும் பார்க்கிறோம். தொடர்ந்து அப்படித்தான் சாய்ராம் கல்வி குழுமம் இயங்கும். எனது தந்தை எப்படி சாய்ராம் கல்வி குழுமத்தை அழைத்துச் சென்றாரோ, அவர் வழியில் நானும், எனது சகோதரி உள்ளிட்ட எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், சாய்ராம் கல்வி குழுமத்தை நடத்திச் செல்வோம். நான் குடும்பம் என்று சொல்வது சாய்ராம் கல்வி குழுமத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரையும் தான்” என்று தெரிவித்தார்.

மூத்த கம்யூனிச தலைவர் தா.பாண்டியன் பேசுகையில், “கம்யூனிஸத்தை பின்பற்றும் ஒருவர், பெரும் செல்வந்தராகவும், தன்னிடம் உள்ள செல்வத்தை பலருக்கு தானம் கொடுத்தவராகவும் இருந்தார் என்றால், அது லியோமுத்து தான். இதை நான் எங்கு வேண்டுமானாலும் சொல்வேன், காரணம், அவருடன் எனக்கு இருந்த பல ஆண்டுகள் நட்பில், அவர் செய்த உதவிகளை அறிவேன். அவரது சொந்த ஊரில், பெண்களுக்கு தனியாக பள்ளி கட்ட வேண்டும் என்று 5 ஏக்கர் நிலம் வழங்க முன் வந்தார். ஆனால், அரசியல் காரணமாக அதை ஏற்றுக்கொள்ள சிலர் மருத்தார்கள். அதேபோல தமிழகத்தில் டிஜிட்டல் நூலகம் ஒன்றை கட்ட வேண்டும், என்பதற்காக பல ஏக்கர் நிலமும், ரூ.50 லட்சம் நிதியும் தருகிறேன், என்று கூறினார். அவர் சொன்னதை நான், தமிழக அரசிடம் சொன்னேன், சிறந்த யோசனை என்று கூறிவிட்டு, அதையும் ஏற்க மறுத்தது, அதற்கும் அரசியல் பின்னணி தான் காரணம். இப்படி அவர் பலருக்கு பல உதவிகளை செய்து வந்திருக்கிறார்.

லியோ முத்து, தெரிந்து செய்தது குறைவு, தெரியாமல் அவர் செய்த உதவிகள் பல, அது அத்தனையும் எனக்கு தெரியும். நற்பண்புகள் பொறிந்திய மனிதனாக புளோட்டஸ் வாழ்ந்தான், அவர் உயிரிழக்கும்போது அவனை கொல்ல வந்தவனே, இயற்கையைப் பார்த்து, இயற்கையே இந்த உலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதன் மாண்டுவிட்டான், என்பதை தெரியப்படுத்த எழுந்து நில், என்று கூறினான். அதுபோல தான் லியோமுத்துவும், நாம் எப்படி வாழ வேண்டும், என்பதின் உதாரணமாக வாழ்க்கையில் நற்பண்புகள் பொறுந்திய சிறந்த மனிதராக வாழ்ந்துக்காட்டினார்” என்று தெரிவித்தார்.

ஆர்.எம்.கே கல்வி நிறுவனத்தின் நிறுவனர் முனிரத்னம் பேசுகையில், “லியோ முத்து அவர்கள் எனக்கு கிடைத்த சிறந்த நண்பர். அவரை பார்த்துதான், எப்படி வாழ வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். சாய்பிரகாஷ் பேசுகையில், தற்போது இந்தியாவின் சிறந்த 10 கல்லூரிகளில் ஒன்றாக உள்ள சாய்ராம், அடுத்த ஆண்டு அந்த இடத்தில் இருக்குமா என்பது தெரியாது, என்றார். ஏன், அப்படி சொல்கிறீர்கள், சாய்ராம் கல்லூரி தொடர்ந்து அந்த இடத்தில் நீடிக்கும், அந்த அளவுக்கு லியோமுத்து, தனது கல்வி குழுமத்தை மிகச் சிறப்பான வழியில் நடத்தினார். நீங்களும் அதே சிறப்பான வழியில் நடத்திச் செல்வீர்கள், என்ற நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் இருக்கிறது” என்றார்.

நிகழ்ச்சியில், நடிகர் மயில்சாமி, ஏ.கனகராஜ், அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், மக்கள் தொலைக்காட்ச்சி பாஸ்கர் ஆகியோரும் லியோ முத்து குறித்து பேசினார்கள்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...