Saturday, 8 October 2016

ரெமோ – விமர்சனம்

ரிலீசுக்கு முன்பே எக்கச்சக்க புரமோஷன்களுடன் எதிர்பார்ப்பை கிளறி விட்ட படம் தான் சிவகார்த்திகேயனின் இந்த ரெமோ. டைட்டில் அந்நியன் ரெமோவாக இருந்தாலும் கேரக்டரில் ‘அவ்வை சண்முகி’ கமலாக மாறியிருக்கிறார்.


சத்யம் தியேட்டர் வாசல்ல பிரம்மாண்டமான கட்-அவுட் வைக்கிற அளவுக்கு பெரிய ஹீரோவாக ஆசைப்படுகிறார் சிவகார்த்திகேயன். அதற்காக பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரை சந்தித்து சான்ஸ் கேட்கிறார். அவரோ நான் எடுக்கப்போற ‘அவ்வை சண்முகி பார்ட் 2’ படத்துல ஹீரோ இளம்பெண் நர்ஸ் கேரக்டர். அதனால பொம்பள லுக்குல நீ என் முன்னால வந்து நில் என்கிறார். அதே கெட்டப்போடு ஒரு பேருந்தில் பயணம் செய்பவர் அழகான நாயகி கீர்த்தி சுரேஷை சந்திக்க மனசைப் பறி கொடுக்கிறார்.


கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயனை பெண் என்று நினைத்துக் கொள்ள, அதையே ஐடியாவாக்கி அவர் வேலை செய்யும் மருத்துவமனையிலேயே நர்ஸாக சேர்கிறார். இன்னொருத்தருக்கு நிச்சயமான பெண் என்று தெரிந்தும் அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். காதல் கை கூடியதா? கூடவே சத்யம் தியேட்டர் வாசலில் பேனர் வைக்கிற ஹீரோ ஆசை நிறைவேறியதா? என்பதே கிளைமாக்ஸ்.


ரெகுலராக பார்க்கிற சிவகார்த்திகேயனை விட நர்ஸ் ‘ரெமோ’வாக வருகிற கெட்டப் சேஞ்ச் ரெஜினி மோத்வானி தான் ரசிகர்களை ‘ப்பா… யார்றா இந்தப் பொண்ணு?’ என்றாக்குகிறார்…! அதற்காக இவ்ளோ…. மேக்கப்பா போடுவீங்க சிவா? வழக்கமாக சிவகார்த்திகேயன் அடிக்கிற டைமிங் வசனங்கள் காமெடிக்கு கியாரண்டி.


நிச்சயமான பிறகு இன்னொருவன் மீது ஏற்படுகிற காதல் சரியா? தவறா? என்று மனசு குழம்பித் தவிக்கிற போது நடிப்பில் ஸ்கோர் செய்கிற கீர்த்தி சுரேஷ் ரெஜினா மோத்வானி என்று சிவகார்த்திகேயன் சொல்வதை அப்படியே நம்புவதெல்லாம் டூ மச்.


பெத்த பையன் ஒரு அழகான பொண்ணைக் காதலிச்சா அம்மாக்கள் எவ்ளோ சந்தோஷப்படுவார்கள் என்பதற்கு சரண்யா பொன்வண்ணன் தான் சரியான ஆள் என்பதை திரையில் காட்ட இந்தப்படமும் ஒரு சாம்பிள்.


சதீஷூம், நான் கடவுள் ராஜேந்திரனும் ஒப்புக்கு காமெடி செய்தாலும் வருகிற காட்சிகளில் எல்லாம் சிரிக்க வைக்காமல் போக மாட்டேன் என்கிறார் யோகி பாபு. சிவகார்த்திகேயனை பெண் என்று நினைத்துக் கொண்டு அவர் பின்னால் காதல் மயக்கத்தில் சுற்றுவதும், பின்னர் தன் காதலியைக் காணவில்லையே என்று பிட் நோட்டிஸ் அடித்து கொடுத்து ஒவ்வொரு பேருந்தாக தேடுவதிலும் தனக்கான இருப்பை சரியாகச் செய்திருக்கிறார்.


சண்டைக் காட்சிகளில் கூட ரசிக்க வைக்கிற இயக்குநர் பாடல் காட்சிகளில் எரிச்சலைக் கிளப்புகிறார். அனிருத்தா இந்தப் படத்தோட பாடல்களுக்கு மியூசிக் என்று சந்தேகத்தோடு கேட்க வைக்கிற அளவுக்கு மனசில் ஒட்டாமல் போகின்றன பாடல்கள்.


முழுப்படத்தையும் ஹைகிளாஸ் லெவலில் காட்டியிருக்கிறது பி.சி.ஸ்ரீராமின் கலர்புல்லான ஒளிப்பதிவு. அதேபோல கலை இயக்குநரின் உழைப்பும் படம் முழுக்க இளைக்கப்பட்டிருக்கிறது.

நிச்சயமான பொண்ணை துரத்தி துரத்தி காதலிக்க வைப்பது மாதிரியான கதைக்களத்தில் எத்தனையோ படங்கள் வந்து விட்டது. அதில் கூடுதலான ஒன்று இந்தப்படம்.

கீர்த்தி சுரேஷ் அவசரமாக பார்க்க வேண்டும் என்று நள்ளிரவில் கூப்பிட்டாலும் அதே நர்ஸ் உடையோடு வீட்டிலிருந்து தெருவுக்கு வந்து விடுகிறார் சிவகார்த்திகேயன். இப்படி அடுக்கி வைக்க ஆயிரத்தெட்டு லாஜிக் மீறல்கள் படத்தில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ரெஜினா மோத்வானி என்கிற ரெமோ செய்கிற அளப்பறைகளில் மன்னித்து விடலாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...