Saturday, 8 October 2016

ரெக்க – விமர்சனம்

உண்மையா காதலிக்கிற ஜோடி யாரா இருந்தாலும் தூக்கிட்டுப் போய் கல்யாணம் செஞ்சு வைக்கிற தைரியசாலி வக்கீல் ஹீரோ விஜய் சேதுபதி.

அதே தைரியத்தோட வில்லன் ஹரீஸ் உத்தமன் கட்டிக்கப்போற பொண்ணையும் கடத்திக் கொண்டு வர, இருவருக்கும் பிரச்சனை ஆரம்பிக்குது.

தங்கச்சியோட கல்யாணத்தை நடத்துகிற நேரத்துல பாருக்கு குடிக்கப் போய் ஹரீஸ் உத்தமனோட அடியாளுங்ககிட்ட சண்டை வழிக்கிறார் விஜய் சேதுபதியோட நண்பர் சதீஸ்.


அது பெரிய பிரச்சனையாகி ஹரீஸ் உத்தமன் முன்னாடி கொண்டு போய் விஜய் சேதுபதியை நிப்பாட்டுது.

நடக்குறது விஜய் சேதுபதியோட தங்கச்சி கல்யாணம் தான்னு தெரிய வந்ததும், அதை பிரச்சனை பண்ணி நிறுத்த யோசிக்கிறார் ஹரீஸ் உத்தமன்.


”ப்ளீஸ் என் தங்கச்சி கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாம நடக்கணும். அதுக்கு நீ என்ன சொன்னாலும் நான் செய்றேங்கிறார்.”

”அப்போ மதுரையில பெரிய கையான மினிஸ்டர் மணிவாசகத்தோட பொண்ணு லட்சுமிமேனனை தூக்கிட்டு வந்து என்கிட்ட விட்டுட்டு போய்க்கிட்டே இரு” என்கிறார்.

லட்சுமிமேனனோ இன்னொரு வில்லனான கபீர் சிங்க்கோட முறைப்பெண். அப்புறமென்ன? ரெண்டு வில்லன்களோட கோபத்துக்கும் ஆளாகுற விஜய் சேதுபதி அவங்களை எப்படி சமாளிச்சார்? தங்கச்சி கல்யாணத்தை நல்லபடியா முடிச்சாரா? அவருக்கும் லட்சுமிமேனனுக்கும் லவ் வந்துச்சா? இல்லையா?ங்கிற பல கேள்விகளுக்கு பதில் சொல்லுது இடைவேளைப் பிறகான காட்சிகள் முதல் கிளைமாக்ஸ் வரை.

இதுவரைக்கும் இப்படி ஒரு விஜய் சேதுபதியை ரசிகர்கள் திரையில பார்த்திருக்க மாட்டாங்க. மனுஷன் ஆக்‌ஷன் படங்களுக்கும் செட்டாகிறவர்ங்கிறதை இந்தப் படத்தில் நிரூபித்திருக்கிறார். படத்தில் வருகிற அத்தனை சண்டைக்காட்சிகளிலும் சும்மா நச்சு நச்சுன்னு அனல் பறக்குது.

நாயகியாக வருகிற லட்சுமிமேனன்? அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு… என்று சினேகன் போலத்தான் பரிதாபமாக கேட்க வைக்கிறார். உப்பிப்போய் ஊதிப்போய் என பல சுற்றுகள் பெருத்துப் போய் காட்சியளிக்கிறார். அவருக்கான காஸ்ட்யூம்கள் தேர்வும் ரசிக்கும்படியாக இல்லாதது பெரும்குறை.


ஒரு அப்பா மகன் உறவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் கே.எஸ்.ரவிக்குமாரும் – விஜய் சேதுபதியும் டுவீலரில் வரும்போது பேசிக்கொள்கிற வசனங்களே போதும்.


படத்தில் விஜய் சேதுபதியின் ஆக்‌ஷனைப் போல கவனிக்க வைக்கிற இரண்டு முக்கியமான கேரக்டர்கள் கிஷோரும், மாலாக்காவாக வருகிற சிஜா ரோஸூம்!


பெரும்பாலான படங்களில் வில்லனாகப் பார்த்த கிஷோரை இதில் ஒரு நல்ல கேரக்டரில் பார்க்க முடிகிறது. காதலியின் அப்பா செய்த தவறுக்காக ஊரார் மத்தியில் இவர் அடி வாங்கி விட்டு பைத்தியமாகி சுற்றித் திரிகிற காட்சிகளில் பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.


கிளைமாக்ஸில் கிஷோரின் காலில் ஓடி வந்து விழும் மாலாக்காவும் இவருக்குமான அந்தக் காட்சி நெகிழ்ச்சியின் உச்சம்.


காமெடிக்காக சதீஷ் இருந்தாலும் சொல்லி சிரிக்கும்படி படத்தில் காமெடி இல்லாதது பெருங்குறை.


மாலாக்கா… இடைவேளைக்குப் பிறகு நம் மனசோடு ஒட்டி உறவாடுகிற கேரக்டர் இது தான்.


குட்டி சேதுபதியாக வருகிற அந்த குட்டிச் சிறுவனுக்கும், இவருக்குமான ஐ லவ் யூ போர்ஷன் படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் மனசை விட்டு வெளியேறாத கனமான கேரக்டர்கள். அதிலும் கிளைமாக்ஸில் நான் தான் சிவா என்று மாலாக்காவுக்கு தன்னை அடையாளம் காட்டி விட்டு நெஞ்சம் நெகிழ அப்படியே அணைத்துக் கொள்கிற காட்சியில் விழியோரத்தில் சில துளிகள் கண்ணீர் கசிவுக்கு உத்தரவாதம்.


வழக்கமாக ஒரே வில்லனுடன் ஹீரோ மோதுவதை தவிர்த்து இதில் இரண்டு வில்லன்களையும் புரட்டி புரட்டி எடுத்து ஆக்‌ஷன் விருந்து படைத்திருக்கிறார்கள்.


இமானின் இசையில் பின்னணி இசை கொஞ்சம் எக்ஸ்ட்ரா இரைச்சலைத் தந்தாலும், விர்ர்ரு… விர்ரு…, கண்ணம்மா கண்ணம்மா, கண்ண காட்டு போதும் என அத்தனை பாடல்களும் இசையை அசை போட வைக்கிற பாடல்கள்.


தினேஷ் கிருஷ்ணனின் நேர்த்தியான ஒளிப்பதிவில் எந்தக் குறையும் இல்லை. ராஜசேகரின் சண்டைக்காட்சிகளில் ஸ்க்ரீனே கிழிந்து விடுமோ என்கிற அளவுக்கு வேகம்.


இடைவேளைக்கு பிறகான காட்சிகளில் இருக்கிற நேர்த்தியையும், வேகத்தையும் முதல் பாதியிலும் எஸ்க்ட்ரா ஆக்‌ஷனோடு காமெடி கலந்து வைத்திருக்கலாம்.


”கையில காப்பு கட்டினவன் மட்டும் தான் அடிப்பானா.. ஏன் கயிறு கட்டினவன் அடிக்க மாட்டானா?” என்கிற பஞ்ச்சுகளோடு ”ஐ லவ் யூ” என்கிற வார்த்தையை வெளிநாடுகளில் எதற்கெல்லாம் பயன்படுத்துகிறார்கள். நம்ம ஊரில் அது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான விளக்கம் வரை வசனங்களில் கவனிக்க வைக்கின்றன.

விஜய் சேதுபதிக்காக முதல் முறை ஒரு பக்கா ஆக்‌ஷன், பேமிலி செண்டிமெண்ட் மசாலா கமர்ஷியல் படமாக குடும்பத்தோடு ரசிக்கும்படி தந்திருக்கிறார் இயக்குநர் ரத்தின சிவா.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...