Saturday, 12 August 2017

இயக்குனர் ராம் எனக்கு தரமணி படத்தில் முழு சுதந்திரம் கொடுத்தார் - ஆண்ட்ரியா பேச்சு

ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா மற்றும் புதுமுக நாயகன் வசந்த் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள 'தரமணி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக வணிக தரப்புகள் தெரிவித்துள்ளன. 'தரமணி' படத்தின் டீசர்களுக்கும், கதை சாராம்சத்துக்கும், படத்தின் பாடல்களுக்கும் மக்களிடையே கிடைத்த பெரும் ஆதவால் இப்படத்திற்கு இன்று நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என இப்படத்தின் தயாரிப்பு தரப்பு கூறினர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை JSK பிலிம் கார்பொரேஷன்ஸ் தயாரித்துள்ளது.


துணிச்சல் மட்டுமின்றி புத்திசாலித்தனமும் உள்ள ஒரு நடிகையால் மட்டுமே 'தரமணி' போன்ற ஒரு படத்தை தேர்ந்தெடுத்து நடிக்கமுடியும். இப்படத்தின் கதாநாயகியான , பல திறமைகள் கொண்ட ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் 'தரமணி' யின் டீசர்களிலிருந்தே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 'தரமணி' குறித்து ஆண்ட்ரியா பேசுகையில், '' இயக்குனர் ராம் சாருடன் சில சந்திப்புகளிலேயே 'தரமணி' தொடங்கியது. 

'தரமணி' படத்தில் எனது கதாபாத்திரம் இவ்வளவு துணிச்சலாக இருக்கும் என முதலில் நான் நினைக்கவில்லை. மக்களின் வரவேற்பையும் கருத்துக்களையும் பார்க்கும்பொழுது, நான் எதிர்பார்த்ததை விட மிக துணிச்சலாக இந்த கதாபாத்திரம் தோன்றுகிறது. எனது சொந்த உடல் மொழியையும் யதார்த்த நடிப்பையும் வெளிப்படுத்த இயக்குனர் ராம் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். 'தரமணி' படத்திற்கு மனதளவில் நிறைய உழைப்பு தேவைப்பட்டது. எனது கலை திறமையையும் நேரத்தையும் மதிப்பவர்களோடு பணிபுரிவதே எனக்கு பிடிக்கும், ராம் சார் இவ்விரண்டு அம்சங்களையும் மிகவும் மதிப்பவர். 

ஒரு படம் பற்றிய அவரது அணுகுமுறையும் மிகவும் யதார்த்தமாக காட்சியமைக்கும் முறையும் எனக்கு பிடித்திருந்தது. நடிகர்களுக்கு எதையும் அறிவுறுத்தி திணிக்காமல் அவர்களுடன் படத்தின் கதை மற்றும் அவர்களது காட்சிகள் பற்றி ஒரு ஆரோக்கியமான விவாதம் நடத்தி படபிடுப்பு நடத்துவார் இயக்குனர் ராம். பெண்கள் ஆண்களுக்கு எல்லாவிதத்திலும் சமம் என்பது நிரூபணமாகி வரும் காலம் இது. ஆணை போல் ஒரு பெண்ணும் ஒரு வேலைக்கு போய், சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆண்களை சார்ந்து வாழும் நிலை மாறி ,பெண்கள் தங்களது அன்றாட தேவைகளை தாங்களே பூர்த்திசெய்துகொள்ளும் அளவிற்கு உயர்ந்துள்ளதால் ஆண்களின் ஈகோ பாதிக்கப்பட்டிருக்கிறது . நான் நம்பும் எனது இந்த சொந்த கருத்துக்களாதான் 'தரமணி' படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது ''

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...