Tuesday, 29 November 2022

தெற்கில் உள்ள விநியோகஸ்தர்கள் ‘அவதார் 2’ படத்திற்கு மிகப் பெரிய விலைக் கொடுக்க முன்வந்துள்ளதாக அறிக்கைத் தெரிவிக்கிறது


தெற்கு எப்போதுமே VFX-ல் வரக்கூடிய மிகப் பிரம்மாண்டமான எண்டர்டெயினர் படங்களுக்கு ஆதரவு கொடுப்பதற்குத் தவறுவதில்லை. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் காட்சிகள் சினிமா சந்தையில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவில் பல இடங்களில் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதியுடன் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் விநியோகஸ்தர்கள் மற்றும் எக்ஸிபிட்டர்ஸ் (exhibitors) அனைவரது கவனமும் படத்தின் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் வசூலின் மீதே உள்ளது.  


ஐந்து நாட்களுக்கு முன்புத் தொடங்கிய இந்தப் படத்தின் முன்பதிவுகள் எதிர்பார்த்ததை விடவும் குறிப்பாக தெற்கில் நன்றாகவே உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாத் துறையைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் தங்களுடைய மாநிலங்களில் ‘அவதார் 2’ படத்தை வெளியிடுவதற்காக 100-150 கோடி ரூபாய் பணத்தை மேற்கோள் காட்டியுள்ளனர். இன்னும் இது குறித்தான உறுதியான முடிவுகள் வெளியாகவில்லை என்றாலும் ‘அவதார் 2’ படத்தின் மீது ரசிகர்கள் வைத்துள்ள அதிகமான எதிர்பார்ப்பும் அவர்கள் காட்டும் ஆர்வமுமே இந்த முடிவை விநியோகஸ்தர்களை எடுக்க வைத்துள்ளது.


’அவதார்2’ திரைப்படம் டிசம்பர் 16ம் தேதி வெளியாவதை முன்னிட்டு தெலுங்கு விநியோகஸ்தர்கள் தங்களது சொந்தத் திரையரங்கத் திரைகளையே இந்தப் படத்திற்கு ஒதுக்க முன்வந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், தமிழ் மற்றும் மலையாள விநியோகதஸ்தர்களும் இந்தப் படத்தைப் பெறுவதற்காக மிகப் பெரிய விலைக் கொடுக்க முன்வந்துள்ளனர்.

Friday, 25 November 2022

’காரி’ திரைப்பட விமர்சனம்


Casting :
 Sasikumar, Parvathy Arun, JD Chakravarthy, Balaji Sakthivel, Aadukalam Naren, Ammu Abhirami. Redin Kingsley, Nagineedu, Ramkumar Ganesan

Directed By : Hemanth

Music By : D.Imman

Produced By : S.Lakshman Kumar

 

கோவில் நிர்வாகம் யாருக்கு சொந்தம்? என்பதில் இரண்டு ஊர்களுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. இதனால், கோவில் திருவிழா பல ஆண்டுகள் நடக்காமல் இருக்க, பல வருடங்களாக தண்ணீரே வராத ஆற்றை குப்பை கிடங்காக மாற்ற அரசு முடிவு செய்கிறது. தங்களது ஊர் குப்பை கிடங்காக மாறுவதை தடுக்க நினைக்கும் ஊர் பெரியவர்கள், அதற்காக கோவில் திருவிழாவை நடத்த முடிவு செய்கிறார்கள். ஆனால், கோவில் நிர்வாகம் யாருக்கு சொந்தம்? என்பதில் மீண்டும் பிரச்சனை எழ, ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி அதில் எந்த ஊர் வெற்றி பெறுகிறதோ அவர்களுக்கே கோவில் நிர்வாகம் சொந்தம், என்று முடிவு செய்யப்படுகிறது.

 

ஒரு ஊர் 18 காளைகளை போட்டியில் இறக்க, மற்றொரு ஊரை சேர்ந்த 18 மாடுபிடி வீரர்கள் குறைந்தது 10 காளைகளை அடக்கி விட்டால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று முடிவு செய்கிறார்கள். அதன்படி, வீட்டுக்கு ஒரு வீரர் என்று தேர்வு செய்யும் கிராம மக்கள் வெள்ளைச்சாமி குடும்பத்தை சேர்ந்த வாரிசையும் இந்த போட்டியில் பங்கேற்க வைக்க முடிவு செய்து அவரை தேடி சென்னைக்கு புறப்பட, வெள்ளைச்சாமி கிடைத்தாரா? ஜல்லிக்கட்டு போட்டி நடந்ததா? இல்லையா?, அதன் மூலம் அந்த ஊருக்கு எத்தகைய நன்மை கிடைத்தது? போன்ற கேள்விகளுக்கான விடை தான் ‘காரி’-யின் கதை.

 

ஜல்லிக்கட்டு போட்டியின் மூலம் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி பல அமைப்புகள் அப்போட்டிக்கு தடை கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியால் ஊருக்கும், காளைகளுக்கும் கிடைக்க கூடிய நன்மைகளை மிக விளக்கமாக சொல்லியிருக்கும் இப்படத்தின் மையக்கருவும், அதை படமாக்கிய விதமும் ஜல்லிக்கட்டு போட்டிக்கும், அதை நேசிக்கும் மக்களின் நம்பிக்கைக்கும் வலு சேர்த்திருக்கிறது.

 

சேது என்ற வேடத்தில் வெள்ளைச்சாமியின் வாரிசாக நடித்திருக்கும் சசிகுமார், முதல் பாதியில் சென்னை தமிழ் பேசும் சென்னை வாசியாக வலம் வருபவர், இரண்டாம் பாதியில் இராமநாதபுரம் மாவட்ட இளைஞராக மாறி தன் மக்களுக்காகவும், ஊருக்காகவும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டும்படி உள்ளது. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தனது தந்தையின் எண்ணத்தை உதாசினப்படுத்தும் சசிகுமார், இரண்டாம் பாதியில் தனது தந்தை வழியில் பயணிக்கும் போது நடிப்பிலும் பாராட்டு பெறுகிறார். சசிகுமார் வழக்கமான பாணியில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கச்சிதமாக நடித்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் பார்வதி அருண், கதையுடன் பயணிக்கும் கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்திருக்கிறார். அதிலும், தனது காளையை கேட்டு அவர் மண்ணில் புரண்டு அழும் காட்சியில் கைதட்டல் பெறும் விதத்தில் நடித்திருக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் ஜேடி சக்கரவர்த்தி, ஸ்டைலிஷான வில்லனாக கலக்கியிருக்கிறார். அவரது ஆசை கொடூரமாக இருந்தாலும், அதை வெளிப்படுத்தும் போது நடிப்பில் அசத்துகிறார்.

 

சசிகுமாரின் அப்பாவாக நடித்திருக்கும் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம், சக்யுக்தா ஆகியோரது நடிப்பும், ரெடின் கிங்ஸ்லியின் காமெடியும் அளவாக இருக்கிறது.

 

இராமநாதபுர மாவட்டத்தின் வறட்சியை கண் முன் கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா, இரண்டாம் பாதியில் அதே ஊரை விவசாய பூமியாக காட்சிப்படுத்திய விதம் நேர்த்தி. ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடுகளின் வேகத்தையும், வீரியத்தையும் மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பவர் காரி காளையின் முறைப்பைக் காட்டி நம்மை பயமுறுத்தவும் செய்திருக்கிறார்.

 

டி.இமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. வழக்கமான தனது பாணியை தவிர்த்திருக்கும் டி.இமான், தனது அடையாளமே இல்லாமல் புதிதாக இசையமைத்திருக்கிறார். குறிப்பாக பின்னணி இசைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

 

இயக்குநர் சொல்ல நினைத்ததை மக்களிடம் சரியான முறையில் படத்தொகுப்பாளர் டி.சிவனந்தீஸ்வரன் கொண்டு சேர்த்திருந்தாலும், முதல் பாதியில் காட்சிகளை மெதுவாக நகர்த்தியிருப்பதை தவிர்த்திருக்கலாம். 

 

கதை எழுதி இயக்கியிருக்கும் ஹெமந்த், ஜல்லிக்கட்டு போட்டியின் மூலம் மாடுகளை மக்கள் கடவுளாக தான் வணங்குகிறார்களே தவிர, அவற்றை எந்த விதத்திலும் துன்புறுத்துவதில்லை, என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அதே சமயம், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க போராடுகிறவர்கள், குதிரை பந்தயத்திற்கு ஏன் தடை கேட்பதில்லை என்றும், குதிரை பந்தயத்தால் குதிரைகள் எப்படி துன்புறுத்தப்படுகிறது, என்பதையும் சொல்லியிருக்கிறார்.

 

ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றி கதை நகர்ந்தாலும், சமூக பிரச்சனையையும் படத்தில் பேசியிருக்கும் இயக்குநர் ஹேமந்த், ஆடு,மாடு, பறவைகளும் உயிர் தான், அவற்றையும் நாம் நேசிக்க வேண்டும் என்ற மெசஜை மிக அழகாக சொல்லியிருக்கிறார்.

 

சசிகுமாரை தேடி சென்னைக்கு வரும் ஊர் பெரியவர்கள் சிறுமியை உடன் அழைத்து வருவது, அந்த சிறுமிக்கு உணவகத்தில் ஏற்படும் கொடுமை, போன்றவை திணிக்கப்பட்டவையாக இருக்கிறது. படத்திற்கு எந்த வகையிலும் ஒட்டாத அந்த காட்சிகளை தவிர்த்திருக்கலாம். அதேபோல், அம்மு அபிராமியின் கதாபாத்திரமும் எதற்கு என்று தெரியவில்லை.

 

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக மட்டும் இன்றி, தரிசாக கிடக்கும் நிலங்களை குப்பை மேடாக மாற்றும் ஆட்சியாளர்கள், அதனால் அழியும் கால்நடைகள் மற்றும் பறவைகள் என பல விஷயங்களை படம் பேசியிருந்தாலும், அதை கமர்ஷியலாகவும் சொல்லி, ரசிக்கும்படி படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் ஹெமந்த் மற்றும் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் லக்‌ஷமன் குமார் இருவரையும் வெகுவாக பாராட்டலாம்.

 

மொத்தத்தில், ‘காரி’ காளையை போல் தரம்.

 

ரேட்டிங் 3.5/5

“ரங்கோலி” படத்தின் செகண்ட் லுக் வெளியீடு


ஃபர்ஸ்ட் லுக்கில் ரசிகர்களிடம் பேரெதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ரங்கோலி படத்தின் செக்ண்ட் லுக்  எம் ஜி ஆர் கல்லூரி கல்ச்சுரல் விழாவில் 2000 கல்லூரி மாணர்வகள் மத்தியில், கோலாகலமாக வெளியிடப்பட்டது. 


Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இப்படத்தின் இரண்டாவது லுக் நேற்று எம் ஜி ஆர் யுனிவர்சிடி & ரிசர்ச் கல்லூரி கல்ச்சுரல் விழாவில் 2000 கல்லூரி மாணவர்கள் மத்தியில் கல்லூரி பிரசிடண்ட் MR. ACS அருண்குமார்  அவர்களால் கோலாகலமாக வெளியிடப்பட்டது. 


குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதை. 

பள்ளி மாணவர்கள் குதூகலமான கொண்டாட்டத்துடன் அமர்ந்திருக்கும் இந்த செகண்ட் லுக் நம் பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளை கிளறுகிறது. படத்தின் போஸ்டர்கள்  படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வருகிறது. 


மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகாமகிறார். பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ்  முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கடப்பா ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. 


Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ்  இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி KS இசையமைத்துள்ளார். I.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். R.சத்யநாராயணன் எடிட்டிங் செய்துள்ளார். ஆனந்த் மணி கலை இயக்கம் செய்துள்ளார். மேலும் இப்படத்தில் பாடல்கள் கார்த்திக் நேத்தா, வேல்முருகன் மற்றும் இளன்  எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு விரைவில் வெளியாகவுள்ளது

Wednesday, 23 November 2022

“ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” திரை விமர்சனம்


 நடனத்தை வைத்து உருவாகியிருக்கும் முதல் இந்திய தொடர் என்ற அடையாளத்துடன் வந்திருக்கும் “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” தொடர் எப்படி இருக்கிறது ?

இயக்குநர் AL விஜய் உருவாக்கத்தில் பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் இணைந்து இயக்கியுள்ள இந்த தொடர் முழுக்க நடனத்தை பின்னணி கதைகளமாக கொண்டு உருவாகியுள்ளது.

நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் சில டீனேஜ் சிறுவர்கள் நடன போட்டியில் கலந்து கொண்டு சாதிப்பது தான் கதை.

AL விஜய் இதே கதையில் ஏற்கனவே பிரபு தேவா மற்றும் தித்யா நடிப்பில் ஒரு படம் எடுத்திருந்தார். இப்போது அதே கதை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து முழு நீள தொடராக மாறியிருக்கிறது.

கஷ்டபடும் குடும்ப பின்னணியில் வாழும் சிறுவர்கள் அவர்களின் ஆசை லட்சியமான நடனத்தில் சாதிக்க துடிக்கிறார்கள் அதற்கு வரும் தடைகளை தகர்த்தெறிந்தார்களா ? ஜெயித்தார்களா என்பது தான் கதை.

தித்யா சாகர் பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டே மூவரின் நடிப்பு நன்றாக வந்துள்ளது. சிறுவர்கள் அட்டகாசமாக ஆட்கிறார்கள். உண்மையில் அவர்களின் நடிப்பை விட நடன திறமை அட்டகாசமாக இருக்கிறது. தொடரை காப்பாற்றுவது தான் அது தான்.

தொடரில் வரும் நடனகாட்சிகள் ஒவ்வொன்றும் அட்டகாசம். நடன போட்டிகள் அட்டகாசமாக படமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் தொடரின் திரைக்கதை மிக வறட்சியாக இருக்கிறது. நடனம் தவிர வரும் காட்சிகள் எதுவும் சுவாரஸ்யமாக இல்லை. துணை கதாப்பாத்திரங்களில் வரும் நடிகர்களின் நடிப்பும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

மாஸ்டராக நாகேந்திர பிரசாத் கொஞ்சம் மிடுக்கு, கொஞ்சம் கண்டிப்பு என அவரது நடிப்பு கவர்கிறது. நடனம் உங்களுக்கு பிடிக்குமெனில் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

Saturday, 19 November 2022

’கலகத் தலைவன்’ திரைப்பட விமர்சனம்


Casting :
 Udhayanidhi, Nidhhi Agarwal, Aarav, , Jeeva Ravi, Anupama Kumar

Directed By : Magizh Thirumeni

Music By : Srikanth Deva and Arrol Corelli

Produced By : Red Giant Movies

 

எமனாக மாறி மக்களை அழித்த கார்ப்பரேட் நிறுவனத்தை அடியோடு சாய்க்கும் பணியில் நாயகன் உதயநிதி ஈடுபடுகிறார். அதே கார்ப்பரேட் நிறுவனத்தை அழிவில் இருந்து காப்பாற்றுவதற்காக அதை அழிக்க நினைப்பவர்களையும், அவர்களின் திட்டத்தையும் அழிக்க களத்தில் இறங்குகிறார் வில்லன் ஆரவ். இந்த இருவரில் யார் வெற்றி பெற்றது? என்பதை சஸ்பென்ஸோடு சொல்வது தான் ‘கலகத் தலைவன்’.

 

காமெடி மற்றும் காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்த உதயநிதி, தற்போது வித்தியாசமான கதைக்களங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்க தொடங்கியுள்ளார். இதற்காகவே அவரை  பாராட்ட வேண்டும். கதை என்ன கேட்கிறதோ அதற்கு ஏற்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தும் உதயநிதி, பல இடங்களில் கண்களினாலேயே நடித்திருக்கிறார். ஹீரோ தானே பத்து பேரை பாய்ந்து அடிக்கலாம், என்று இல்லாமல் அனைத்தையும் லாஜிக்கோடு செய்திருப்பவர், என்னடா ஹீரோவாக இருந்துக்கொண்டு இப்படி ஓடுகிறாரே! என்று சில காட்சிகளில் யோசிக்க வைத்தாலும், இறுதியில் மேஜிக் நிகழ்த்தி தான் எப்பவுமே ஹீரோ தான், என்பதை நிரூபித்து கைதட்டல் பெறுகிறார்.


வழக்கமான கமர்ஷியல் நாயகியாக அல்லாமல் கதையுடன் பயணிக்கும் நாயகியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் நிதி அகர்வால், காதல் காட்சிகளில் வெளிப்படுத்தும் உணர்வினால் கூடுதல் அழகோடு ஜொலிக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் ஆரோவ், தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி பல இடங்களில் தன்னை நிரூபித்திருக்கிறார். அதிரடியாக அறிமுகமாகி வேகமாக பயணிக்கும் ஆரவ், வரும் அடுத்தடுத்த காட்சிகளும், அவரது கொடூரமான நடிப்பும் படம் பார்ப்பவர்களுக்கே அவர் மீது பயம் ஏற்பட வைக்கிறது.

 

’மெட்ராஸ்’ படத்திற்கு பிறகு ரசிகர்கள் மனதில் நிற்கும் குணச்சித்திர வேடத்தில் கலையரசன் நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் பரபரப்பின் உச்சமாக இருக்க, அதில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

 

ஜீவா ரவி, அங்கனா ராய், ஆர்ஜே விக்னேஷ், அனுபமா குமார் என மற்ற வேடத்தில் நடித்திருப்பவர்கள் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் கே.தில்ராஜ், கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறார். எந்த இடத்திலும் நாயகன், நாயகிக்கு தனியாக லைட்டிங் கொடுக்காமல், அவர்களையும் மற்ற கதாபாத்திரங்களுக்கான கலர்டோனில் காட்சிப்படுத்தியிருப்பது கதையோடு நம்மையும் பயணிக்க வைக்கிறது.

 

அரோல் கொரொலியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக உள்ளது. 

 

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. ‘ஈ’ படத்திற்கு பிறகு கவனிக்கும்படியான பின்னணி இசையமைத்திருக்கும் ஸ்ரீகாந்த் தேவா, தனி கவனம் பெருகிறார்.

 

சமூக அக்கறையோடு கதை எழுதி இயக்கியிருக்கும் மகிழ் திருமேனி, அதை மசாலத்தனம் அற்ற கமர்ஷியல் படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். எந்த காட்சியாக இருந்தாலும் அது லாஜிக்கோடு தான் எடுக்கப்படுகிறது, என்பதை ரசிகர்களுக்கு புரிய வைப்பதில் அதிகம் மெனக்கெட்டிருக்கும் இயக்குநர் அதற்காக சில கதாபாத்திரங்களை திரைக்கதையில் நுழைத்திருக்கிறார்.வேகமாக நகரக்கூடிய திரைக்கதை என்றாலும், அதை காட்சிப்படுத்திய விதம் மிக மெதுவாக இருப்பது படத்திற்கு சற்று பலவீனமாக இருக்கிறது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் அதனால் பாதிப்படையும் மக்களை பற்றி பேசியிருக்கும் விஷயங்களால் அந்த குறை கண்ணுக்கு தெரியவில்லை.

 

மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை சாய்க்கும் முயற்சியில் ஈடுபடும் சாமானியர்களின் கதையை எந்தவித ஹீரோயிஷமும் இல்லாமல் இயல்பாக சொல்லியிருக்கும் இயக்குநர் மகிழ் திருமேனி, படம் முழுவதும் ஹீரோ பயந்து ஓடுவது போல் வைத்துவிட்டு, இறுதியில் புரூஸ்லியின் வாசகத்தோடு,  ஹீரோவின் மனவலிமையை ஒப்பிடும் காட்சியோடு படத்தை முடித்திருப்பது, எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது.

 

மொத்தத்தில், ’கலகத் தலைவன்’ மக்களுக்காக

 

ரேட்டிங் 3.5/5


Friday, 18 November 2022

’பேட்டைக்காளி’ இணையத் தொடர் விமர்சனம்


 Casting : Kishore, Velaramamoorthy, Kalaiarasan, Antony, Sheela, Bala hassan

Directed By : La.Rajkumar

Music By : Santhosh Narayanan

Produced By : Vetri Maaran

 

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில், லா.ராஜ்குமார் எழுதி இயக்கியிருக்கும் இணையத் தொடர் ‘பேட்டைக்காளி’. 8 பாகங்களாக உருவாகியுள்ள இத்தொடரின் முதல் பாகம் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி ஆஹ தமிழ் ஒடிடி தளத்தில் வெளியான நிலையில், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பாகம் என்று இதுவரை ஐந்து பாகங்கள் வெளியாகியுள்ளது. இந்த ஐந்து பாகங்கள் எப்படி இருக்கிறது? என்று விமர்சனத்தை பார்ப்போம்.

 

ஏராளமான திரைப்படங்களில் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பித்திருக்கிறார்கள். ஆனால், பாடல் அல்லது ஏதாவது ஒரு காட்சியில் ஜல்லிக்கட்டு போட்டி வந்து போகும். ஆனால், இந்த இணையத் தொடர் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துக்கொண்டு காளைகளை அடக்கி தங்களது வீரத்தை காட்டும் இளைஞர்கள் ஒரு பக்கம், யாராலும் அடக்க முடியாத காளைகளை வளர்த்து ஜல்லிக்கட்டில் பெயர் வாங்கும் பெரிய மனிதர்கள் ஒரு பக்கம், என்று ஜல்லிக்கட்டு போட்டியை கெளரவமாகவும், பெருமையாகவும் நினைக்கும் மனிதர்களுக்ளு இடையே நடக்கும் மோதலும், அரசியலும் தான் இந்த இணையத் தொடரின் கதை.

 

ஊர் பண்ணையரானா வேலராமூர்த்தியின் காளையை யாராலும் அடக்க முடியாது. இதனால், அவருக்கு ஜல்லிக்கட்டு போட்டியில் தனி மரியாதை கிடைக்கிறது. அதே சமயம், எந்த காளையாக இருந்தாலும் அதை அடக்க கூடிய திறமையான மாடுபிடி வீரரான கலையரசன் மற்றும் அவரது ஊரை சேர்ந்தவர்கள் வேலராமமூர்த்தியின் காளையை அடக்க கூடாது, என்று ஊர் கட்டுப்பாடு விதிக்கிறது. ஆனால், அந்த கட்டுப்பாட்டையும் மீறி கலையரசன், வேலராமமூர்த்தியின் காளையை அடக்கி விடுகிறார். அதனால், மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட அந்த பிரச்சனையை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை, பல்வேறு திருப்பங்களுடன் சொல்வது தான் ‘பேட்டைக்காளி’.

 

சாதி பிரிவினையை மையமாக வைத்து முதல் பாகம் நகர, இரண்டாம் பாகம் ஜல்லிக்கட்டு போட்டியில் இருக்கும் அரசியலை மையமாக வைத்து நகர்கிறது. மூன்றாம் பாகம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டி மற்றும் சூழ்ச்சியை மையப்படுத்தி நகர, நான்காம் பாகத்தில் ‘பேட்டைக்காளி’ யார்? என்ற உண்மை தெரிய வருவதோடு, பேட்டைக்காளியின் எண்ட்ரியால், அடுத்தடுத்த பாகங்கள் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது.

 

மாடுபிடி வீரர் வேடத்தில் நடித்திருக்கும் கலையரசன், காளையை போல் நடிப்பில் வேகத்தை வெளிக்காட்டியிருக்கிறார். அவர் காளை பிடிக்கும் போது உண்மையான மாடுபிடி வீரராக மாறி அசத்துகிறார். அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் ஜெட் வேகத்தில் பயணிக்கிறது.

 

ஊர் பண்ணையாராக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, வழக்கமான முறைப்பை நடிப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருந்தாலும், அவரது நடிப்பு ஒரே மாதிரியாக இருப்பது சலிப்படைய செய்கிறது.கலையரசனின் மாமாவாக நடித்திருக்கும் கிஷோர், தனது அறிமுக காட்சியிலேயே நம்மை கதைக்குள் அழைத்து சென்று விடுகிறார். இளைஞர்களுக்கும், ஊர் மக்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும் கிஷோர், ஏழு நாட்டு பஞ்சாயத்து முடிந்த பிறகு, கலையரசனுக்காக சவால் விடும் காட்சியில் கண்களில் கோபம் இருந்தாலும், அதை வெளிப்படுத்துவதில் காட்டியிருக்கும் நிதானம் மூலம் கைதட்டல் பெறுகிறார்.

 

வேலராமமூர்த்தியின் மகனாக நடித்திருக்கும் பாலா ஹாசன், சூட்சியின் மறு உருவமாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் அப்பாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர், பிறகு அப்பாவின் அதிகாரம் கைக்கு வந்த பிறகு மாறும் இடத்தில் நடிப்பில் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார்.

 

கிஷோர், வேலராமமூர்த்தி, கலையரசன் ஆகியோர் மூன்று பாகங்களை ஆக்கிரமிக்க, நான்காவது பாகத்தில் அறிமுகமாகும் ஷீலா ராஜ்குமாரும், பேட்டைக்காளியும், அடுத்தடுத்த பாகங்களில் என்ன நடக்கப் போகிறது? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்கள்.

 

வேல்ராஜின் ஒளிப்பதிவு இதுவரை திரையில் காட்டாத ஜல்லிக்கட்டு போட்டியை காட்சிப்படுத்தியிருக்கிறது. நிஜ ஜல்லிக்கட்டு போட்டியை காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் ஜல்லிக்கட்டு போட்டி காட்சிகள் அனைத்தும் பிரமிக்க வைக்கிறது. அந்த போட்டியில் கலையரசனும் இறங்கி விளையாடுவது, கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் நேர்த்தியாக இருப்பது போல், ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கும் வீரர்களின் சாகசங்கள் மெய் சிலிரிக்க வைக்கிறது. 

 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மேற்பார்வையில் இசைப்பணிகள் நடைபெற்றுள்ளது. பின்னணி இசையில் வரும் சில பீஜியம்கள் ‘பொல்லாதவன்’, ‘வடசென்னை’ போன்ற படங்களை நினைவுப்படுத்துகிறது. அதை தவிர்த்துவிட்டு பார்த்தால் இசை காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

 

எழுதி இயக்கியிருக்கும் லா. ராஜ்குமார், ஆரம்பத்தில் சாதியை மையப்படுத்தி கதையை நகர்த்தினாலும், அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் அதை நேசிக்கும் மனிதர்கள், அவர்களுக்கு இடையே இருக்கும் அரசியல் என்று இதுவரை பார்த்திராத ஒரு களத்தில் நம்மை பயணிக்க வைக்கிறார். 

 

ஒரு பாகம் முடிந்த பிறகு அடுத்த பாகத்தில் என்ன இருக்கும், என்ற எதிர்பார்ப்பு ஏற்படும் வகையில் பல திருப்புமுனைகளை வைத்து நான்கு பாகங்களையும் தொய்வில்லாமல் நகர்த்தி செல்லும் இயக்குநர் லா.ராஜ்குமார், இறுதியில் மீதம் உள்ள நான்கு பாகங்களை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவலை தூண்டும் விதத்தில் முடித்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ஜல்லிக்கட்டு போட்டியை வியக்கும் வகையில் படமாக்கியிருகும் ‘பேட்டைக்காளி’ இணையத் தொடர் உலகில் முக்கிய இடத்தை பிடிக்கும்.

 

ரேட்டிங் 4/5

facebook sharing button
twitter sharing button
email sharing button
linkedin sharing button
sharethis sharing buttonRelated Posts Plugin for WordPress, Blogger...