Sunday, 2 April 2017

நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல விமர்சனம்

படிக்காதவர்களிடம் இருக்கிற குறைந்த பட்ச நேர்மை கூட படித்தவர்களிடம் இருப்பதில்லை. அப்படி நேர்மையில்லாத வழியில் சம்பாதிக்க ஆசைப்படும் நன்கு படித்த நான்கு இளைஞர்களின் வாழ்க்கை தான் இந்த ”நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல.”

நேர்மையான போலீஸ் அதிகாரியின் மகன் ஷாரியா எதுவும் தெரியாத ஒரு அப்பாவி. அப்படிப்பட்டவன் விபத்தில் இறந்து போகும் தன் அண்ணனின் கூட்டாளிகளான கார்த்திக்கேயன், இவன்ஸ்ரீ, ஜெகதீஷ் மூவரோடு நண்பராகிறான்.

அந்த மூவருமே சின்னச் சின்ன திருட்டு வேலைகளைச் செய்து பணம் சம்பாதிப்பவர்கள். எத்தனை நாட்கள் தான் சின்னச் சின்னதாய் திருடுவது. ஒரே ஒருமுறை பெரியதாக திருடி வாழ்க்கையில் செட்டிலாகி விட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அதற்காக வங்கியில் 5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வரும் ஒருவரிடமிருந்து நான்கு பேரும் அடித்து விடுகிறார்கள். திருடிய அந்தப் பணத்தை அப்பாவி ஷாரியாவிடம் கொடுத்து பத்திரமாக வைக்கச் சொல்லுகிறார்கள். அவரோ போலீசுக்குப் பயந்து ஒரு ஒதுக்குறமான இடத்தில் போட்டு விடுகிறார். போலீஸ் சென்றதும் போட்ட இடத்தில் பணப்பையை தேடிப்போனால் அது காணாமல் போகிறது. அவர் சொல்லும் இந்த உண்மையை நம்ப மறுக்கும் மற்ற மூன்று பேரும் ஒரு வாரத்துக்குள் 5 லட்சம் ரூபாய் எங்கள் கைக்குள் வந்தாக வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள்.

அதற்காக அவர் என்னென்ன வேலைகளைச் செய்தார்? அந்த திருட்டுக் கும்பலிடமிருந்து ஷாரியா தப்பித்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
மணிரத்னம் படங்களில் நடிகைகள் தான் ஸ்பெஷலாக இருப்பார்கள். ஆனால் அவரது உதவியாளரான தினேஷ் செல்வராஜின் இந்தப் படத்திலோ மருந்துக்குக் கூட ஒரு பெண் இல்லை. 

கதையை அதன் போக்கில் கொண்டு சென்றால் போதும் படம் வெற்றி பெறும் என்று துணிச்சலோடு படத்தை இயக்கியிருக்கிறார். அந்தத் துணிச்சலுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு. அப்பாவி இளைஞராக வரும் ஷாரியா அந்தப் பரிதாபத்தை அப்படியே திரையில் நம் கண்முன் தூக்கி நிறுத்துகிறார். போலீஸ் தன்னை துரத்துகிற என்று தெரிந்ததும் முகத்தில் அவர் காட்டுகிற பதட்டம் கன கச்சிதம்.

ஹீரோவாக வரும் கார்த்திகேயன் வில்லத்தனம் கலந்த நடிப்பில் கலக்கியிருக்கிறார். கூட இருக்கும் நண்பர்கள் எல்லாம் பயந்து நடுங்கும் போது இவர் மட்டும் அந்தப் பிரச்சனையிலிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசிக்கிறார். அடிக்கடி அவர் சொல்லும் life is beautiful என்கிற வார்த்தை சரியான நேரத்தில் சரியான இடங்களில் சொல்லி மிரட்டுகிறார்.
கூடவே வரும் இவன்ஸ்ரீ ஜெகதீஸ் இருவரின் நடிப்பும் காமெடியோடு கலந்த யதார்த்தம்.

என்.ஆர்.ஐ பார்ட்டியாக வரும் ஜார்ஜ் விஜய் அடி வாங்கும் காட்சிகளில் உருக்கமாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் அருள் ஜோதி, மாடலாக வரும் அரவிந்த் என படத்தில் வருகிற எல்லா கேரக்டர்களுமே தங்கள் பங்கை மிகச்சரியாகச் செய்திருக்கிறார்கள்.

வாழ்க்கையை வாழ பணம் தேவைப்படலாம், ஆனால் நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கைக்கு தேவையான பணமே போதும் என்கிற சமூகச் சிந்தனையை ஒரு கிரைம் த்ரில்லர் கதையினூடே சொல்லியிருக்கிறார்கள்.
காதுகளை அதிகம் இம்சிக்காமல் சைலண்ட்டாகவே மிரட்டுகிறது நவீன் – பியோன் சரோ இரட்டை இசையமைப்பாளர்களின் பின்னணி இசை.
மூன்று மாதங்கள் மட்டுமே செல்லுபடியாகும் ப்ளாங்க் செக்கைக் கொடுத்து இதை நீ வாழுகிற வரை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்தப் பெரும் பணக்காரர் சொல்வதெல்லாம் திரைக்கதையில் அப்பட்டமாகத் தெரியும் பிழை.

இப்படிச் சின்னச் சின்னதாய் ஆங்காங்கே சில பிழைகள் எட்டிப் பார்த்தாலும் ஆண்கள் போடுகிற உள் பனியன் விளம்பரத்துக்கே பெண்களைக் காட்டுகிற இந்த காலகட்டத்தில் படத்தில் ஒரு பெண் கேரக்டரைக் கூட காட்டாமல் அதற்கு தேவையும் எழாமல் புத்திசாலித்தனத்தோடு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் தினேஷ் செல்வராஜ் தமிழ்சினிமாவுக்கு நல்வரவு.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...