Friday, 12 May 2017

எய்தவன் – விமர்சனம்

சேவையாகத் தர வேண்டிய கல்வியை ஏக போக கட்டணக் கொள்ளையால் வியாபாரமாக்கி விட்டன தனியார் கல்வி நிறுவனங்கள். இதனால் ஏழை, நடுத்தர மக்களுக்கு சிறந்த கல்வி எட்டாக்கனியாகவே இருக்கிறது.

அந்த வகையில் மருத்துவக் கல்வியில் தனியார் கல்வி நிறுவனங்கள் அடிக்கும் கட்டணக் கொள்ளையையும், அதன் பின்னணியையும் துணிச்சலோடு சொல்லியிருக்கும் படம் தான் இந்த ”எய்தவன்”.

ரூபாய் நோட்டு மிஷின்களை விற்பனை செய்யும் வேலையைச் செய்கிறவர் நடுத்தரக் குடும்பத்து இளைஞன் ஹீரோ கலையரசன். அவருடைய தங்கை சிறு வயதிலிருந்தே டாக்டராக வேண்டும் என்கிற லட்சியத்தோடு கண்ணும், கருத்துமாக படித்து வருகிறார். அப்படிப் படித்து பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் கூட அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போய் விடுகிறது.

இதனால் தங்கையின் டாக்டர் லட்சியம் நிறைவேறாமல் போய் விடக்கூடாதே என்பதற்காக தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் தேடுகிறார் கலையரசன். போகிற கல்லூரிகள் எல்லாமே 80 லட்சம் கொடு, 1 கோடி கொடு என்று கேட்க ஒரு புரோக்கர் மூலமாக 50 லட்சத்துக்கு படியும் ஒரு கல்லூரியில் தங்கையை சேர்த்து விடுகிறார்.

படிக்கப் போன ஒரு வாரம் கழித்து தான் அந்தக் கல்லூரிக்கு உரிய அங்கீகாரமே இல்லை என்கிற விஷயம் தெரிய வருகிறது. உடனே தான் பணம் கொடுத்த புரோக்கரிடமே கொடுத்த பணத்தை திரும்ப கேட்கிறார் கலையரசன். அதில் வாக்குவாதம் ஏற்பட்டு இருவருக்கும் லேசாக கைகலப்பு நடக்கிறது. தூக்கத்தை தொலைக்கும் கலையரசன் தான் பணத்தைக் கொடுத்து ஏமாந்தது பற்றி அந்தக் கல்லூரிக்கு எதிராக குடும்பத்தோடு சென்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு திரும்புகிற போது கார் விபத்து ஒன்றில் அவரது தங்கை இறந்து விடுகிறார்.

அது எதேச்சையாக நடந்த சாலை விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்று முடிவுக்கு வரும் கலையரசன் தன் தங்கைக்கு ஏற்பட்ட நிலைமை இனி எந்த ஒரு மருத்துவக் கல்லூரி மாணவருக்கும் வரக்கூடாது என்று தன் ஒரே பாசமான தங்கையின் டாக்டர் கனவை சீர்குலைத்த மருத்துவக் கல்லூரி முதலாளிக்கு எதிராக போராட்டத்தை துவக்குகிறார்.

அவர் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

ஒரு நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த இளைஞர் கேரக்டரில் கன கச்சிதம் காட்டுகிறார் கலையரசன். காலேஜ்ல சேர்ந்து பத்து நாளாச்சு. இந்த பத்து நாளும் குடும்பமே அவ கூட காலேஜூக்கு போயிட்டு வர்றீங்களே? என்று நண்பன் கேட்கிற போது டாக்டருக்கு படிக்கணும்கிறது அவளோட சின்ன வயசுக் கனவுடா இப்போ அது நிறைவேறிடுச்சுன்னு நெனைக்கிறப்போ சந்தோஷமா இருக்கு அதான் என்று சொல்கிற இடத்தில் தங்கை மீதான பாசத்தை பிரதிபலிக்கிறார்.

இப்படி பாசமான முகம் ஒரு பக்கம் இருந்தாலும் கொடுத்த 50 லட்சம் பணத்தை வாங்கியே தீர வேண்டுமென்று மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக பொங்குவதும், அதன் முதலாளியுடன் துணிச்சலோடு மோத இறங்குவதும் ஆக்‌ஷன் பரபர…

நாயகியாக வரும் சட்னா டைடஸ் பெண் போலீஸ் அதிகாரியாக வருகிறார். கலையரசன் கட்டிக்கிற போகிற பெண் என்கிற வகையில் அவரை ஏற்றுக் கொள்ள முடிகிறது. அதைத்தாண்டி அவருடைய கேரக்டருக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை.

கலையரசனின் அப்பாவாக வரும் வேல ராமமூர்த்தி பொருத்தமான தேர்வு.

வில்லன்களாக வரும் ஆடுகளம் நரேன், கிருஷ்ணா, மற்றும் சரித்திரன் மூவருமே வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள் அதிலும் மருத்துவக் கல்லூரியின் முதலாளியாக வரும் சரித்திரன் அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே அதிகம் பேசாமல் பார்வையாலேயே அவர் காட்டும் பணக்காரத் திமிர் செம! செம!!

சி. பிரேம்குமாரின் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள் திகிலைக் கூட்டுகின்றன. பின்னணி இசையில் கொஞ்சம் சத்தத்தை குறைத்திருக்கலாம் இசையமைப்பாளர் பார்த்தவ் பார்கோ.

கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் இருக்கும் இழுவையை கொஞ்சமாச்சும் கத்தரி போட்டிருக்கலாம் எடிட்டர் சார்!

டாக்டராக வேண்டும் என்று மருத்துவப் படிப்புக்காக கல்லூரியில் சேர நினைக்கிற அத்தனை மாணவர்களும் கண்டிப்பாக இந்தப்படத்தை பார்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிற அளவுக்கு ஒரு விழிப்புணர்வுப் படமாகத் தந்த இயக்குநர் சக்தி ராஜசேகரன், முதல் படத்திலேயே ஒரு சமூகப் பிரச்சனையை கையாண்ட விதத்தில் கை தட்டல்களைப் பெறுகிறார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...