Saturday, 3 June 2017

ஒரு கிடாயின் கருணை மனு – விமர்சனம்

தமிழில் கிராமத்துப் பின்னணியில் மண் சார்ந்த படைப்புகளைத் தருகிற இயக்குநர் என்றால் உடனே பாரதிராஜா தான் நம் எல்லோர் நினைவுக்கும் வருவார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அமீரின் ‘பருத்தி வீரன்’ படத்தில் அப்படி ஒரு கிராமத்து மண் வாசனையை நுகர்கிற சந்தோஷம் தமிழ்சினிமா ரசிகர்களுக்குக் கிடைத்தது.

அந்த வரிசையில் மிக மிக எளிமையான பின்னணியில், முழுமையான அழகியலோடு நம் கிராமத்து ஞாபகங்களை கிளறி விடக்கூடிய பெருமைமிகு படைப்பாக வந்திருக்கும் படம் தான் இந்த ”ஒரு கிடாயின் கருணை மனு.”

எந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களின் வாழ்க்கைக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறதோ? அதே போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் இதுபோன்ற மக்களின் வாழ்வியலை, மக்களின் பிரச்சனைகளைப் பற்றிப் பேசக்கூடிய படங்களை தயாரிக்கவும் முன் வருகின்றன. தண்ணீர் பிரச்சனையைப் பற்றிப் பேசிய ‘கத்தி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது.

அதேபோல கிராமத்து வாழ்வியலை மிக அழகாக நம் மனசுக்கு நெருக்கமாகச் சொல்லும் இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஈராஸ் இண்டர்நேஷனல் தயாரித்திருக்கிறது. முன்வந்த அந்த நிறுவனத்துக்கு முதலில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வோம்.

இன்றைக்கும் கிராமத்துப் பக்கம் போனால் படமாக்க ஆயிரம் ஆயிரம் கதைகள் இருக்கின்றன. அங்கு வாழ்கிற ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கதை ஒளிந்திருக்கும். அப்படி ஒரு இளைஞனின் கதைதான் இந்தப்படம்.

நாயகன் விதார்த்தும், நாயகி ரவீணாவும் புதுமணத் தம்பதிகள். திருமணமான கையோடு பாட்டியின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு குலதெய்வக் கோவிலுக்கு கிடாவெட்டி சாமி கும்பிட உறவினர்கள், நண்பர்களோடு புடை சூழ பலி கொடுக்க ஒரு கிடாவையும் லாரியில் ஏற்றிக்கொண்டு கிளம்புகிறார். போகிற வழியில் விதார்த் ஓட்டிச் செல்லும் அந்த லாரியில் இளைஞர் ஒருவர் அடிபட்டு இறந்து விடுகிறார்.

இதனால் அதிர்ச்சியடையும் விதார்த்தும், அவருடைய சொந்தங்களும், நண்பர்களும் அந்தப் பிரச்சனையிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்? என்பதே கிளைமாக்ஸ்.

ஒரு மனித உயிருக்கு பதறித்துடிக்கும் மனித மனங்கள் என்னைப் போன்ற வாயில்லா ஜீவராசிகளை வெட்டிச் சாப்பிடத் தயங்குவதில்லையே ஏன்? என்று ஒரு கிடா மனிதர்களைப் பார்த்துக் கேட்பது போலவே அமைக்கப்பட்டிருக்கிறது திரைக்கதை.

தேடி வந்ததையெல்லாம் வாரிப்போட்டுக்கொண்டு பத்தோடு பதினொன்றாக இருக்கிற ஹீரோவாக இல்லாமல் தேர்ந்தெடுக்கிற கதைக்களம் ரசிகர்களுக்கு புதுவித ரசனையைத் தர வேண்டுமென்கிற விதார்த்தின் பொறுமைக்கு இந்தப்படம் அவருக்கு இன்னொரு ‘மைனா’ என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கிராமத்து இளைஞர் கேரக்டரில் நூறு சதவீதம் மிகச்சரியாகப் பொருந்தியிருக்கும் மனுஷன் ஒரு உயிரைக் கொன்று விட்ட குற்ற உணர்ச்சியில் புழுங்கித் தவிப்பதை மிக ஆழமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதே சமயத்தில் தனது வயதைச் சுட்டிக் காட்டுகிற போதெல்லாம் காமெடியிலும் ரசிக்க வைக்கிறார்.

நாயகியாக வரும் ரவீணா இன்றைக்கும் கிராமத்துப் பக்கம் நாம் போனால் அங்குள்ள இளம் பெண்கள் எப்படி இருப்பார்களோ? அப்படியே ”சுமார் ரக” அழகு முகமாக பொருந்தி நம் மனசுக்குள் உட்கார்ந்து கொள்கிறார்.

படத்தில் வருகிற அரும்பாடு உள்ளிட்ட பல பெயர் தெரியாத கேரக்டர்களும், புதுமுகங்களும் செய்கிற சேட்டைகளும், அடிக்கிற நையாண்டிகளும், அவ்வப்போது அள்ளி விடுகிற டபுள் மீனிங் டயலாக்குகளும் எல்லை மீறாத காமெடிக்கு கியாரண்டி. நாம் பார்த்த, பழகிய பல வெள்ளந்தி கேரக்டர்களை இப்படத்தில் ஆங்காங்கே பேச விட்டிருப்பது கூடுதல் சுவாரஷ்யம்.

சொந்தக்காரனாகவே இருந்தாலும் தொழில் என்று வந்து விட்டால் ஒரு வக்கீல் எப்படியெல்லாம் குறுக்குப் புத்தியுடன் நடந்து கொள்வான் என்பதற்கு ஜார்ஜ் ஏற்று நடித்திருக்கும் வக்கீல் கேரக்டரே சாட்சி. முதலில் சொந்தக்காரன் என்றும் பாராமல் விதார்த்திடம் பணம் கறக்க ஆசைப்பட்டு அவர் செய்யும் செயல் பின்னர் அவருக்கே பிரச்சனையாகும் போது எப்படி அதை நேக்காக ரூட் மாற்றி விட்டு சமாளிக்கிறார் என்பது சட்டத்தில் இருக்கிற ஓட்டைகளுக்கு அடையாளம்!

ரகுராமின் பின்னணி இசையும், ஆர்.வி சரணின் ஒளிப்பதிவும், கூட்டல், குறைச்சல் இல்லாத கன கச்சிதமாக எடிட்டிங்கும் படத்தின் விறுவிறுப்புக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி.

அதிகப் பொருட்செலவு என்பதெல்லாம் ஒரு பகட்டு என்கிற உண்மையையும் உடைத்தெறிந்து கதை தான் உண்மையான திரைக்கலைஞனின் அடையாளம் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது இந்தப்படம்.

ஒரு எளிமையான கதைக்கு அதிகமாக மெனக்கிட்டு நேர்த்தியாக திரைக்கதை அமைத்து, அர்த்தமுள்ள வசனங்களுடன், உச்சக்கட்ட ரசனையோடு இயக்கித் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சுரேஷ் சங்கய்யா!

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...