Saturday, 12 August 2017

வேலையில்லா பட்டதாரி 2 – விமர்சனம்

முதல் பாகத்தில் படித்த என்ஜினியர் படிப்புக்கு சரியான வேலை கிடைக்காமல் அலைந்த தனுஷ் இதில் முதல் பாகத்தில் வந்த சுரபி( இதில் ரீது வர்மா) யின் அப்பாவுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்துடன் வேலையில் இருக்கிறார்.

ஓப்பனிங் காட்சியில் நடக்கும் விருது வழங்கும் விழாவில் கஜோலுக்கு சொந்தமான பிரபல கட்டுமான நிறுவனம் எல்லா விருதுகளையும் வாங்கிக் குவிக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே மிகச்சிறந்த பொறியாளர் என்ற விருதை போட்டி நிறுவனத்தில் வேலை செய்யும் தனுஷ் தான் வாங்குகிறார்.

இதனால் அவரை தனது கம்பெனியில் வேலை செய்ய அழைக்கிறார் கஜோல். தனுஷோ அந்த வேலை வேண்டாம் என்கிறார், அதோடு அவரது கம்பெனி வாங்க நினைத்த பல கோடி மதிப்புள்ள கட்டுமான திட்டம் ஒன்றையும் தான் ஏற்கனவே வேலை செய்து கொண்டிருக்கும் கம்பெனிக்கு கொண்டு வருகிறார்.

இதனால் கோபமடையும் கஜோல் தன்னுடைய பணபலம், அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைக் கொண்டு தனுஷ் வேலை செய்யும் நிறுவனத்துக்கு செல்லும் எல்லா கட்டுமான திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடுகிறார். அதோடு அந்தக் கம்பெனியிலிருந்தே வேலையை விட்டுச் செல்கிற அளவுக்கு தனுஷுக்கு அடுத்தடுத்த நெருக்கடிகளைக் கொடுக்கிறார்.

இப்படி கஜோல் செய்யும் தொடர் அடாவடிகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் தனுஷ் எப்படி ஜெயிக்கிறார்? என்பதே கிளைமாக்ஸ்.

முதல் பாகமான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திலேயே ரகுவரனாக ரசிகர்களிடம் பெயரெடுத்து விட்ட தனுஷ் இதில் அந்தக் கேரக்டருக்கு இன்னும் எக்ஸ்ட்ராவாக மெனக்கிட்டிருக்கிறார். ஸ்டைலான பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி, ஆக்‌ஷன் காட்சிகளில் காட்டுகிற மாஸ் என சீனுக்கு சீன் சிக்ஸர் அடிக்கிறார்.

முழுப்படத்தையும் ஒற்றை ஆளாய் தாங்கி நிற்பவர் ” சிங்கத்துக்கு வாலா இருக்கிறதை விட பூனைக்கு தலையா இருந்துக்கிறேன்” போன்ற பஞ்ச்சுகளால் தியேட்டரை அதிர வைக்கிறார்.

முதல் பாகத்தில் தனுஷின் காதலியாக வந்த அமலாபால் இதில் அவருடைய மனைவியாக வருகிறார். காதலியாக முகத்தில் எப்போதுமே புன்னகை ததும்ப அமைதியே உருவாக வந்தவர் இதில் மனைவியாக புரமோஷன் கிடைத்ததும் காட்டுகிற கண்டிப்பு நிஜ வாழ்க்கையில் நாம் பார்க்கிற பல பெண்களை அப்படியே ஞாபகப்படுத்துகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ரீ-எண்ட்ரி கொடுத்திருந்தாலும் பவர்புல்லான வில்லி கேரக்டரில் கவனம் ஈர்க்கிறார் கஜோல். இளைமையான தோற்றத்திலும், அழகிலும் அதே ‘மின்சார கனவு’ கஜோலை ஞாபகப்படுத்துகிறார். சில நீளமான வசனங்களுக்காக பொறுமையான லிப் மூவ்மெண்ட் கொடுத்திருந்தாலும் அதை கச்சிதமாக செய்திருப்பது பாராட்டுக்குரியது.

அதே வழக்கமான அட்வைஸ் செய்கிற பொறுப்புள்ள அப்பாவாக வருகிறார் சமுத்திரக்கனி. ஒருசில இமேஜினேஷன் காட்சிகளில் வந்து போகிற சரண்யா பொன்வண்ணன் முதல் பாகத்தை ஞாபகப்படுத்தி விட்டுப் போகிறார்.

காமெடிக்கு விவேக்கும், செல் முருகனும் இருக்கிறார்கள். முதல் பாகத்தில் விவேக்கின் மனைவி தங்க புஷ்பம் என்ற முகம் காட்டப்படாத கேரக்டரை வைத்து இருவரும் செய்யும் காமெடி கலாட்டா இதிலும் அதே டைப்பில் தொடர்ந்து கைதட்டல்களை அள்ளுகிறார்கள். குறிப்பாக விவேக்கிடம் அவரது மனைவி என்னோட பிறந்த நாள் என்னைக்கு என்று கேட்க, அதற்கு விவேக் யோசித்துக் கொண்டிருக்கும் போதே செல்முருகன் டக்கென்று தேதி முதல் நட்சத்திரம் வரை புட்டு புட்டு வைக்கிற காட்சியில் தியேட்டரே சிரிப்பு சத்தத்தில் அதிர்கிறது.

முதல் பாகத்தில் படத்தின் விறுவிறுப்புக்கு அனிருத்தின் இசை மிகப்பெரிய பங்காற்றியது. அதே எதிர்பார்ப்பில் இந்தப்படத்தை பார்த்ததாலோ என்னவோ ஷான் ரோல்டனின் இசையில் படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் மனதை கவரவில்லை. சில காட்சிகளில் வரும் பின்னணி இசையும், பாடல்களும் பவர் பாண்டி படத்தையும் ஞாபகப்படுத்துகிறது. பேசாமல் அனிருத்தையே இந்தப் பாகத்திலும் இசையமைப்பாளராக்கியிருக்கலாம் தனுஷ். (அடுத்த பாகத்திலாவது அவரை கட்டாயம் கமிட் செய்து விடுங்கள்.)

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த பாகத்தை எந்த பிசிறும் இல்லாமல் தர வேண்டும் என்று யோசித்த இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் அதற்கான விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பதில் தடுமாறியிருக்கிறார். இடைவேளைக்கு முன்பு வரை சோர்வு தராமல் செல்கிற காட்சியமைப்புகள் இடைவேளைக்குப் பிறகு நகர்வேனா என்கிறது. தனுஷ் – காஜோல் இருவருக்குமிடையே ஏற்படுகிற மோதல் தான் படத்தில் பிரதானம் என்கிற போது அவ்வளவு வில்லித்தனம் செய்கிற கஜோலுக்கு ஒரே ஒரு நாள் மழை வெள்ளம் வந்த இரவில் தனுஷ் எடுத்து விடுகிற ஒரு சில அட்வைஸ்களில் ஆளே மாறிப்போவது நம்பும்படியாக இல்லை.

அடுத்தடுத்து காட்சிகள் வரும் என்று உட்கார்ந்தால் அதுதான் கிளைமாக்ஸ், அவ்வளவு தான் படம் என்று திருப்தியில்லாத சீக்கிரமே முடிந்து விட்டதைப் போன்ற உணர்வைத் தருகிறது படம். ஒருவேளை பெண் வில்லி என்பதால் இப்படி ஒரு கிளைமாக்ஸை இயக்குநர் வைத்திருக்கலாம், ஆனால் தனுஷ் மாதிரியான மாஸ் ஹீரோவின் படங்களில் அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் கிளைமாக்ஸ் இது இல்லையே?.
முதல் பாகத்தில் இருந்த வேகமும், விறுவிறுப்பும், எளிமையும், யதார்த்தமும் இரண்டாம் பாகத்தின் இடைவேளைக்குப் பிறகு இல்லை என்பது மட்டும் தான் குறை. மற்றபடி தனுஷ் என்கிற ஒற்றை மனிதனின் யதார்த்தம் மீறாத நடிப்பு, ஆக்‌ஷன், ஸ்டைலீசான மேனரிஸங்கள் ஆகியவற்றுக்காக பார்க்கலாம்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...