Friday, 11 August 2017

நடிகர் சூரியின் சினிமா அனுபவங்கள்

1996-ம் ஆண்டு மதுரைக்கு அருகே உள்ள கிராமத்திலிருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தேன். ஆனால் சென்னையில் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் பணம் தேவைப்பட்டது. ஆகையால் சினிமாவில் அரங்குகள் அமைக்கும் போது பெயின்ட் அடிக்கும் பணிக்குச் சென்றேன்.

அப்போது சென்னையில் நண்பர்களுடன் இணைந்து காமெடி நாடகங்கள் போடுவேன். வீரப்பன் கதையை மையமாக வைத்து நாடகம் போட்டதற்கு, அதைப் பார்த்த காவல்துறையினர் 400 ரூபாய் பரிசாக அளித்து பாராட்டினார்கள். 'காதல்', 'தீபாவளி' படங்களில் சில காட்சிகளில் நடித்தேன். அஜித் சாருடன் 'ஜி' படத்தில் ஒரு காட்சியில் வருவேன். 'தீபாவளி' படத்தில் உதவி இயக்குநராக இருந்த சுசீந்திரன் சார் 'வெண்ணிலா கபடி குழு' படம் இயக்கிய போது எனக்கு வாய்ப்பு கொடுத்தார். முதலில் சிறுவேடமாக இருந்ததை, பின்னர் சில காட்சிகள் இணைத்து பெரிய கதாபாத்திரமாக உருவாக்கினார். அப்படத்தில் வரும் புரோட்டா காமெடியால் இந்நிலைமைக்கு வந்துள்ளேன். 

எனக்கும், மனைவிக்கும் 'வெண்ணிலா கபடி குழு' படம் மிகவும் பிடிக்கும். என் குழந்தைகளுக்கு 'அரண்மனை 2' படத்தின் காமெடி மிகவும் பிடிக்கும். சமீபத்தில் வந்த புஷ்பா புஷன் காமெடி, புரோட்ட காமெடியை பின்னுக்கு தள்ளிவிட்டது. நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் டூயட் பாடல் வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கு அவர்கள் சம்மதிக்க வேண்டுமே. மற்றபடி எனக்கு நாயகனாக வேண்டும் என்ற எண்ணமெல்லாம் துளியுமில்லை. இன்னும் காமெடியனாக நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. காமெடி வண்டியே நல்லபடியாக ஒடிக் கொண்டிருக்கிறது. 

படப்பிடிப்பு தளத்தில் மட்டுமன்றி டப்பிங், மிக்ஸிங் உள்ளிட்ட பணிகளுக்கு இடையே காமெடியை மெருக்கேற்றுவது என் பாணி. இப்போது சில நண்பர்கள் எனது காமெடி காட்சிகளுக்கு உதவுகிறார்கள். என் காமெடிக்கு முன்னோடி என்றால் எங்கப்பா தான். அவரின் காமெடியில் இன்னும் 10 சதவீதத்தை கூட நான் சினிமாவில் செய்யவில்லை. அவர் அப்படியொரு காமெடி மன்னன்.
சினிமாவுக்கு வந்த காலத்தில் பசி கடுமையாக இருக்கும், பணம் இருக்காது. இப்போது ஆண்டவன் புண்ணியத்தில் பணம் இருக்கிறது. ஆனால், இஷ்டப்பட்டதை சாப்பிட முடியவில்லை. ஏனென்றால் ஒரு நடிகருக்கு உடம்பு மிகவும் முக்கியம். உடம்பை கட்டுக் கோப்பாக வைத்திருந்தால் மட்டுமே 10 ஆண்டுகளுக்கு நாயகனுக்கு நண்பனாக நடிக்க முடியும். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோபாக வைத்திருக்கிறேன்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...