Sunday, 13 August 2017

பொதுவாக எம்மனசு தங்கம் – விமர்சனம்

கதாநாயகன் உதயநிதி தன் அப்பாவைப் போலவே தான் பிறந்து வளர்ந்த ஊரும், அங்கு வசிக்கும் மக்களுக்கும் ஏதாவது நல்லது செய்ய நினைக்கிறார். அந்த ஊரில் இருக்கிற கோவிலில் தன் மகளுக்கு மொட்டை அடிக்க வருகிறார் பக்கத்து ஊரைச் சேர்ந்த பார்த்திபன். ஆனால் இந்த நேரத்தில் மொட்டை அடிக்கக் கூடாது என்று ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க கால்வாசி முடியெடுத்த தலையோடு மகளோடு அவமானப்பட்டு வீட்டுக்கு செல்கிறார்.

இதனால் தன்னை அவமானப்படுத்திய ஊர்மக்களை பழி வாங்க அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு அந்த ஊர் கோவிலில் இருக்கும் சாமியையும் தன் ஊருக்கு கொண்டு செல்ல திட்டம் போடுகிறார்.

அதற்காக பார்த்திபன் போடும் அடுத்தடுத்த திட்டங்களை முறியடிக்க போராடுவதோடு அவரது மகள் நாயகி நிவேதா பெத்துராஜையும் காதலிக்கிறார்.

ஜெயித்தது யார்? என்பதே கிளைமாக்ஸ்.

கமர்ஷியல் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ஆசைப்பட்ட உதயநிதி முதல் முறையாக இதில் கிராமத்து இளைஞராக மாறியிருக்கிறார்.

வேட்டியோடு கண்ணைக்கூசுகிற கலர் சட்டை, முறுக்கு மீசை, முகத்திலும் கழுத்திலும் ஸ்டைலுக்காக இரண்டு கண் கண்ணாடிகள் என அந்தக் கேரக்டரில் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அதோடு முந்தைய படங்களை விட இதில் நடிப்பு, ரொமான்ஸ், ஆக்‌ஷன், டான்ஸ் என அத்தனை விஷயங்களிலும் பெருத்த முன்னேற்றத்தை காண முடிகிறது.

நிஜ வாழ்க்கையில் ஒரு மாடலாக இருக்கும் நிவேதா பெத்துராஜை இதில் பாவாடை, தாவணியில் வரும் பக்கா கிராமத்து இளம்ப் பெண்ணாக காட்டியிருக்கிறார்கள். சொல்லிக்கொள்ளுகிற அளவுக்கு அவருடைய கேரக்டரில் புதிதாக எதுவும் இல்லை என்றாலும் ரொமான்ஸ் காட்சிகளிலும் கொடுத்த கேரக்டரில் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

காமெடிக்காக உதயநிதியின் நண்பனாக இறக்கி விடப்பட்டிருக்கிறார் சூரி. ஆனால் காமெடி என்ற பெயரில் அவர் செய்யும் மேனரிஸங்களும், பேசுகிற வசனங்களும் செம போர்! இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.

வில்லனாக வரும் பார்த்திபன் தனக்கே உரிய குசும்பு, நையாண்டி, நக்கல், எகத்தாளம் என எல்லாம் கலந்த குணாதிசயங்களுடன் கூடிய வில்லத்தனம் செய்திருக்கிறார். கடைசிவரை உதயநிதி – பார்த்திபனை சண்டைக்காட்சிகளில் மோத விடாமல் வெறும் வார்த்தை விளையாட்டிலேயே காட்சிகளை நகர்த்தியிருப்பது இயக்குநரின் கொன்சூண்டு புத்திசாலித்தனம்.

அவருடைய உதவியாளராக வரும் மயில்சாமி தன் பங்குக்கு நகைச்சுவையில் நிறைவைத் தருகிறார்.

படத்தில் வருகிற பெயர் தெரியாத சின்னச் சின்னதாய் பல கேரக்டர்கள் தங்களது நடிப்பில் சிரிப்பையும் கலந்தே தருகிறார்கள்.

டி.இமானின் இசையில் ஏற்கனவே கேட்ட பின்னணியைத்தான் மீண்டும் இதில் போட்டிருக்கிறார். அம்மணியே…, சிங்கக்குட்டி.. பச்சி பறந்திருச்சு என பாடல்களும் கேட்ட மெட்டுகள் தான்.

இரண்டரை மணி நேரம் எந்த ஒரு டென்ஷனும் இல்லாமல் சிரிக்க சிரிக்க ஒரு காமெடிப்படத்தை தர முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தளபதி பிரபு. அதில் அவருடைய குருநாதர் பொன்ராமின் படங்களை ஞாபகப்படுத்துவது போன்ற காட்சிகள் இல்லாமல் தனக்கே உரிய தனித்தன்மையோடு தந்திருந்தால் இந்தத் தங்கம் பத்தரை மாத்து தங்கமாகியிருப்பார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...