Sunday, 27 August 2017

தப்பாட்டம் – விமர்சனம்

சந்தேகம் என்ற கொடிய நோய் வந்து விட்டால் இல்வாழ்க்கை இல்லா வாழ்க்கையாகி விடும் என்கிற கருத்தை கிராமத்துப் பின்னணியில் எளிய காட்சியமைப்புகளோடு சொல்லியிக்கும் படம் தான் இந்த ‘தப்பாட்டம்.’

மாமா மற்றும் நண்பர்களுடன் தப்பாட்டம் அடித்து பிழைப்பு நடத்தி வருகிறார் நாயகன் துரை சுதாகர்.

எப்போதும் தனது மாமா தனது அக்கா, அக்கா மகளும், நாயகியுமான டோனா ஆகியோர் மீது அதீத பாசத்தோடு இருக்கிறார். பாசமான அவரை உசுருக்கு உசுராக காதலிக்கிறார் டோனா.

அதே ஊரில் வசிக்கும் பண்ணையார் மகன் ஊருக்குள் வயசுக்கு வருகிற எல்லா இளம் பெண்களையும் வாழைத் தோப்புக்குள் கடத்திச் சென்று கற்பை சூறையாடுகிறார். அவருக்குப் பயந்தே ஊரில் உள்ள எல்லோரும் தங்கள் வீட்டுப்பெண்ணை வயசுக்கு வந்த சில தினங்களிலேயே திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

அப்படிப்பட்ட கயவனிடம் நாயகி டோனாவும் மாட்டிக் கொள்கிறார். நடந்த விஷயங்களை டோனா தன் அம்மாவிடம் சொல்லவும் இதை வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவசரம் அவசரமாக தன் மகளை துரை சுதாகருக்கு திருமணம் செய்து வைக்கிறார். திருமணத்துக்குப் பிறகு கர்ப்பம் தரிக்கிறாள் டோனா.

ஒருநாள் மதுக்கடை ஒன்றில் குடிவாக்கில் ”நீ திருமணம் செய்வதற்கு முன்பாகவே டோனாவை நான் கற்பழித்து விட்டேன்” என்று துரை சுதாகரிடம் சொல்கிறான் பண்ணையார் மகன். இதனால் இருவருக்கும் கை கலப்பு ஏற்பட, பண்ணையார் மகன் சொல்வதைக் கேட்டு கோபப்படும் துரை சுதாகர் டோனாவைப் பிரிகிறார்.

ஆனால் உண்மையில் நடந்தது? பிரிந்த ஜோடி மீண்டும் இணைந்ததா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

சினிமாவுக்குள் வரும் போதே பட்டத்தோடு வருவது தான் லேட்டஸ்ட் ஃபேஷன். அந்த வகையில் இப்படத்தின் நாயகர் துரை சுதாகரும் ‘பப்ளிக் ஸ்டார்’ என்ற பட்டத்தோடு படத்தில் எண்ட்ரி கொடுக்கிறார். பட்டத்தை டைட்டிலில் காண்பிக்கும் போது பின்னணியில் ஒரு குத்தாட்ட சவுண்ட், ஓப்பனிங் சாங் என மாஸ் ஹீரோ லெவலுக்கு துரை சுதாகரை தூக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.முஜிபுர் ரகுமான்.

முதல் படம் தான் என்றாலும் தனக்குக் கொடுத்த தப்பாட்டக் கேரக்டருக்கு எந்தளவுக்கு ஒன்றி நடிக்க முடியுமோ? அந்தளவுக்கு அந்தத் தொழிலில் இருப்பவர்களைப் போல காட்சிகளில் எளிமை காட்டியிருக்கிறார். பட் பாடல் காட்சிகளில் மேக்கப்பை கம்மி பண்ணியிருக்கலாம்.

முதல் பாதியில் மாமன் மீது காதல் வயப்பட்டு அவனை சுற்றி சுற்றி வருகிற போது கிராமத்து பெண்களை ஞாபகப்படுத்துகிறார் நாயகி டோனா. இடை வேளைக்குப் பிறகு திருமணம் ஆனவுடன் பொறுப்பான மனைவியாக மாறுவதும், பாசம் வைத்த கணவர் திடீரென்று சண்டை இழுக்க ஆரம்பிக்கும் போது கதறி அழுகிற போதும் கவனிக்க வைக்கிறார்.

துரை சுதாகரின் மாமாவாக வரும் இயக்குநர் எஸ்.முஜிபுர் ரகுமானும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ராஜன் ஒளிப்பதிவில் காட்சிகளில் கிராமத்து மண்ணின் அழகை திரையில் குறையாமல் ரசிக்கலாம். பழனி பாலுவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும், பின்னணி இசையில் தொடர்ச்சியாக வரும் பேரிரைச்சலை தவிர்த்திருக்கலாம்.

திருமணம் என்கிற பந்தத்தில் சந்தேகம் என்கிற கொடிய நோய்க்கு இடம் கொடுக்கவே கூடாது, கட்டிய மனைவி சொல்வதை நம்பாமல் ஊருக்குள் யார் யாரோ சொல்வதையெல்லாம் முழுமையாக நம்பக்கூடாது, அப்படி நம்பினால் இல்லற வாழ்க்கை நரகமாகி விடும் என்கிற கருத்தை அதிகப் பொருட்செலவு இல்லாமல் கிராமத்துப் பின்னணியில் இயக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.முஜிபுர் ரகுமான்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...