Saturday, 2 September 2017

குரங்கு பொம்மை – விமர்சனம்

ஒரு சிலைக்கடத்தல் அதைச்சுற்றி காதல், நட்பு, அப்பா – மகன் செண்டிமெண்ட், காமெடி என எல்லாம் கலந்து பிண்ணப்பட்ட கொடுத்த காசுக்கு ஆகச்சிறந்த படம் பார்த்த உணர்வைத் தரும் படம் தான் இந்த ‘குரங்கு பொம்மை.’

தஞ்சாவூரில் சிலைக்கடத்தல் தொழிலைச் செய்கிறவர் பிரபல ரெளடி பி.எல்.தேனப்பன். ஊருக்கு அவர் கெட்டவராக இருந்தாலும் எனக்கு அவன் நல்லவன் என்கிற உறுதியோடு அவர் சொல்கிற வேலை எதுவாக இருந்தாலும் மறுப்பேதும் சொல்லாமல் செய்கிறவர் பாரதிராஜா.

அந்தளவுக்கு நட்புக்கு மரியாதை கொடுக்கும் அவரிடம் 5 கோடி மதிப்புள்ள வெண்கலச் சிலை ஒன்றை குரங்கு பொம்மை படம் போட்ட பை ஒன்றில் சென்னைக்கு இல்லீகல் விற்பனைக்காக கொடுத்தனுப்புகிறார் பி.எல்.தேனப்பன். அந்த சிலைக்காக காத்துக் கொண்டிருக்கும் குமரவேலோ சிலை இன்னும் வரவில்லை என்கிறார்.

அதே சமயத்தில் அதே போன்றதொரு குரங்கு பொம்மை படம் போட்ட பை ஒன்று என்னிடம் இருக்கிறது. அதற்கு உரியவர் என்னிடம் வந்து வாங்கிக் கொள்ளலாம் என்று பேஸ்புக்கில் பதிவிடுகிறார் பாரதிராஜாவின் மகனான விதார்த்.

ஆனால் இரண்டுமே ஒரே பை தான். அந்த ஒரே ஒரு குரங்கு பை பாரதிராஜா, விதார்த் என பல மனிதர்களின் கைகள் மாறி சுற்றி சுற்றி வருகிறது. அதையொட்டி நடக்கிற சம்பவங்களும், பரபரப்புகளும் தான் கிளைமாக்ஸ்.

பணம் சம்பாதிப்பது மட்டுமே ஒரு நடிகனின் வேலை இல்லை. அதையும் தாண்டி ”அப்பாடா கொடுத்த காசுக்கு ஒரு நல்ல படம் பார்த்த திருப்திப்பா…” என்கிற சந்தோஷத்தை ரசிகர்களுக்குத் தர வேண்டும் என்கிற மெனக்கிடலை படத்துக்குப் படம் செய்து வரும் விதார்த் இந்தப் படத்திலும் அந்தக் கடமையைச் செய்யத் தவறவில்லை.

சொல்லப்போனால் படத்தில் பாரதிராஜாவை விட அவர் கேரக்டருக்கான முக்கியத்துவம் குறைவு தான். அது தெரிந்தும் கூட ஒரு நல்ல சினிமாவை ரசிகர்களுக்குத் தர வேண்டும் என்கிற அவருடைய பொறுப்புணர்வுக்கு ஒரு சல்யூட்!

கெட்டவர்கள் நிரம்பியிருக்கும் சமூகச் சூழலில் நாம் மட்டும் நல்லவனாக இருந்தால் அந்த மனநிலையோடு இந்த சமூகத்தில் வாழ்வை கடத்துவம் எவ்வளவு கஷ்டம். அந்த கஷ்டம் மொத்தத்தையும் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் சமாளிக்க முடியாமல் திணறும் நிஜத்தை அப்படியே கண் முன்னே கொண்டு வருகிறது.

ஒரு இயக்குநராக இமயத்தில் வைத்து நாம் பார்த்துக் கொண்டிருக்கும் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இந்தப்படத்தில் ஒரு நடிகனாகவும் நமக்கு முன்னே இமயமாக உயர்ந்து நிற்கிறார். வயதான காலத்தில் தனது சின்னச் சின்ன இயலாமைகளை முகத்தில் அவர் வெளிப்படுத்துகிற விதங்களும் சரி, கிளைமாக்ஸில் ”நீ என்னைக் கொல்லப் போற, அதுக்கு முன்னாடி ஒரே ஒரு தடவை நான் மகனை பார்த்துட்டு வந்துடுறேனே? ஆனா கண்டிப்பா நீ என்னை கொல்லப்போற விஷயத்தை அவன்கிட்ட சொல்ல மாட்டேன்” என்று கலங்கிக் கேட்டு அவர் வளர்ந்த கதையை விவரிக்க போது மனுஷன் படம் பார்க்கிற அத்தனை பேருடைய மனசையும் ஒரு நிமிடம் உலுக்கியெடுத்து விடுகிறார். ‘ஹாட்ஸ் ஆப்’ பாரதிராஜா சார்!

நாயகியாக வரும் டெல்னா டேவிஸ் அதிக அலங்காரம் இல்லாத நம் பக்கத்து வீட்டுப் பெண் போல காட்சி தருகிறார். அப்பாவை அடித்தவராக இருந்தாலும் அடுத்தடுத்த சந்திப்பில் விதார்த்தை புரிந்து கொள்வதும், எதையுமே நம்பும் அப்பாவித்தானமும் அவருடைய முகத்துக்கு கன கச்சிதம்.

படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை கதை எந்த பாதையில் பயணிக்கிறது என்று முன்னமே யோசிக்க வைக்காமல் காட்சிகளோடு நம்மைக் கட்டிப்போட்டு ஒன்றிப்போகச் செய்வதில் ஜெயித்திருக்கிறது இயக்குநர் நித்திலனின் புடம் போட்டு எழுதப்பட்ட நேர்த்தியான திரைக்கதை!

ராதாமோகன் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நம்மைக் கவரும் குமரவேல் இதில் கொடூர வில்லனாக முகம் மாற்றியிருக்கிறார். ”என்ன பண்றது விலை வாசியெல்லாம் ஏறிப்போச்சு. வீட்டு வாடகை, பசங்க ஸ்கூல் பீஸ்ன்னு எகப்பட்ட செலவு, என்கூட சேர்ந்தவனெல்லாம் கார், வீடு, பங்களான்னு வசதியாயிட்டான், நானும் அந்த மாதிரி வாழ வேணாமா? எனக்கு அந்த ஆசை இருக்காதா?” என்று செய்யப்போகிற கொலைக்கு சுற்றியிருக்கும் மனிதர்களை காரணமாக்குவதும், என்ன தான் அந்த காரணம் அவருக்கு நியாயமாக இருந்தாலும் அதற்காக அவர் செய்யும் தவறுக்கு கிடைக்கிற தண்டனையும் நறுக்!

தயாரிப்பாளரான பி.எல்.தேனப்பன் இந்தப் படத்தில் வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார். இது அவருக்கு முதல் படமா? ச்ச்சே… ச்ச்சே… சான்ஸே இல்லை என்று ஆச்சரியப்படுகிற அளவுக்கு கேரக்டரை உள் வாங்கி அசால்ட்டான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ்சினிமாவுக்கு ஒரு சைலண்ட்டான வில்லன் ரெடி என்பதை ஆல் தமிழ் டைரக்டர்ஸ் கவனத்தில் கொள்க.

ஜோசியர் சொல்லி விட்டார் என்பதற்காக ஒரு கோடிக்காக அலையும் பிக்பாக்கெட் திருடனாக வரும் ‘கல்கி’ படம் முழுக்க நம்மை சிரிக்க வைக்கும் பணியை பொறுப்பாகச் செய்திருக்கிறார். அதிகம் பேசாமல் பாடி லாங்குவேஜ்லேயே அதைச் செய்வது தமிழ்சினிமாவில் காமெடி வறட்சிக்கு சிறு துளியாக வந்திருக்கிறார். காமெடி ஏரியாவுல உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு பாஸ்!

பாலாசிங், ரமா, கிருஷ்ணமூர்த்தி, ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் நினைவில் நிற்கிற கஞ்சா கருப்பு, பார்க்கிற போதெல்லாம் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் சாப்பாட்டு ராமனாக வரும் அந்த குண்டு மனிதர் அத்தனை பேரும் கொடுத்த கேரக்டருக்கு சிறு குறை கூட வைக்கவில்லை.

கேரக்டர்களை மட்டுமே போகஸ் செய்யாமல் சென்னையை இன்னொரு கோணத்தில் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறது என்.எஸ். உதயகுமாரின் ஒளிப்பதிவு, பாடல்கள் மனசை ஈர்க்கவில்லை என்றாலும் ஒரு த்ரில்லர் படத்துக்குரிய சரியான பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார் அஜுனேஷ் லோக்நாத்.

“நான் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா..? ஏவிஎம் சரவணனே என்னைப் பார்த்தா கையைக் கட்டிக்கிட்டுதான் பேசுவாரு…” என ஒரு சீரியஸான மேட்டருக்குள் திகட்ட திகட்ட காமெடி கலந்த வசனங்களையும் சேர்த்து ரசிக்க வைத்திருக்கும் வசனகர்த்தா மடோன் அஸ்வினுக்கு ஸ்பெஷல் பாராட்டு.

இடைவேளைக்கு முன்பு வரை படம் நகர்கிற உணர்வே தெரியாத வண்ணம் எடிட் செய்த அபினவ் சுந்தர் இடைவேளைக்குப் பிறகான காட்சிகளிலும் அந்த ‘கட்டிங்’ வேலையை கொஞ்சம் செய்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் படம் எக்ஸ்ட்ராவாக ‘ஷார்ப்’ ஆகியிருக்கும்.

படம் முழுக்க ஒரு குரங்கு பொம்மை படம் போட்ட பையை காட்டி காட்டி கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சி வரை சஸ்பென்ஸை எகிற வைக்கிறார் இயக்குநர் நித்திலன்.

தன் போக்கிலேயே பயணிக்கும் அந்தப் பையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத நம்மை கிளைமாக்ஸில் அதன் ஜிப்பை விதார்த் திறக்கவும் ஹார்ட் பீட்டை அதி வேகத்தில் துடிக்க வைத்து ஒட்டுமொத்த கவனத்தையும் தன்னுள்ளே ஈர்த்துக் கொள்கிறது. ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல’ இயக்குநர் நித்திலனின் திறமைக்கு அந்த ஒரு காட்சி போதும்!

ஆகச்சிறந்த சினிமா ரசிப்பனுபவத்தை விரும்பும் அத்தனை ரசிகர்களும் மிஸ் பண்ணாமல் பார்த்தே தீர வேண்டிய படம்!

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...