Saturday, 2 September 2017

புரியாத புதிர் – விமர்சனம்

‘கவண்’, ‘விக்ரம் வேதா’ படங்களின் தொடர் வெற்றிகளைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி மூன்று ஆண்டுகளாக பெட்டிக்குள் முடங்கிக் கிடந்த ‘மெல்லிசை’ படம் தான் ‘புரியாத புதிர்’ என்று டைட்டில் மாற்றப்பட்டு ரிலீசாகியிருக்கிறது.

மியூசிக்கல் டீச்சராக இருக்கும் காயத்ரியும், மியூசிக்கல் இன்ஸ்ட்ரூமென்ட் கடை வைத்திருக்கும் விஜய்சேதுபதியும் ஒரு சில சந்திப்புகளுக்கப்புறம் காதலிக்கிறார்கள்.

அந்தக் காதல் சுகத்தில் லயித்துக் கொண்டிருக்கும் போதே விஜய்சேதுபதியின் நண்பர் ஒருவரின் இல்லீகல் உறவு சம்பந்தப்பட்ட புகைப்படங்களை யாரோ ஒருவர் முகநூலில் பரப்புகிறார்கள். இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொள்கிறார். அடுத்து நாயகி காயத்ரி சம்பந்தப்பட்ட இரண்டு அந்தரங்க வீடியோக்கள் விஜய் சேதுபதியின் மொபைலுக்கு வருகிறது.

இதனால் பதறிப்போகும் விஜய் சேதுபதி தன் காதலியை இப்படி படமெடுத்து தன்னிடம் பகிரும் வேலையைச் செய்வது யார்? எதற்காகச் செய்கிறார்கள்? என்கிற விஜய் சேதுபதியின் தேடலுக்கு கிடைக்கும் விடை அவருக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது. அது என்ன பேரதிர்ச்சி என்பதே கிளைமாக்ஸ்.

ஏற்கனவே பல படங்களில் பார்த்து பார்த்து சலித்துப் போன வழக்கமான பழி வாங்கல் கதை தான், என்றாலும் கிளைமாக்ஸ் வரை அந்த சஸ்பென்ஸை நீட்டித்திருப்பதில் தெரிகிறது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

விஜய் சேதுபதியின் பழைய படம் என்பதை படத்தில் அவருடைய உருவத்தைப் பார்க்கும் போத தெரிந்து விடுகிறது. என்ன செய்வது நல்ல கதை என்று தான் அவரும் வருகிற இயக்குநர்களுடன் சேர்ந்து படம் பண்ணுகிறார். அதன் ரிலீஸ் தாமதமாகும் போது அவரும் என்ன தான் செய்வார்? என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கேரக்டரில் எந்த குறையும் இல்லாத நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார்.

குறிப்பாக கிளைமாக்ஸில் காயத்ரியின் முன்னால் மண்டியிட்டு ”ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு, முதல்ல கீழ இறங்கி வா, அப்புறம் நீ எனக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறேன்.” என்று கெஞ்சும் போது நெகிழ வைக்கிறார்.

கதை முழுக்க முழுக்க நாயகி காயத்ரியை சுற்றியே வருவதால் நடிப்புத் திறமையை வெளிக்காட்ட நல்ல ஸ்கோப் கிடைத்திருக்கிறது. ஆனால் பரபரப்பான காட்சிகளில் மட்டுமே அந்த வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார். எப்போதுமே அவர் முகத்தில் தெரிகிற ஒருவித சோகம், பெரிதாகத் தெரிகிற பருக்கள் ஆகியவை ரொமான்ஸ் காட்சிகளில் கூடத் தெளிவாகத் தெரிவது தான் எரிச்சல்.

ப்ளாஷ்பேக் காட்சிகளில் கொஞ்ச நேரமே வந்தாலும் தனது க்யூட்டான எக்ஸ்பிரஷன்கள் மூலம் தேவதையாக கவர்கிறார் மஹிமா நம்பியார். விளையாட்டாக நடக்கிற பிரச்சனையால் அவர் எடுக்கும் முடிவு டிஜிட்டல் சமூகத்துக்கு ஒரு எச்சரிக்கை.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் டாப் ஆங்கிள் காட்சிகளும், இரவு நேர காட்சிகளும் அதி அற்புதம். சாம் சி.எஸ்.ஸின் பாடல்கள் காட்சிகளின் நகர்வுக்கு பெரும் வேகத்தடையாக இருந்தாலும் பின்னணி இசை ஓகே ரகம்.

மற்றவர்களின் அந்தரங்கரங்க விஷயங்களை பொதுவெளியில் பரப்புபவர்களுக்கும், அப்படி வருகிற விஷயங்களில் தனக்கு பாதிப்பில்லை என்று கடந்து போகிற சுயநல மனிதர்களுக்கும் பாடமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...