Thursday, 19 October 2017

’மெர்சல்’ விமர்சனம்

அட்லி இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடித்துள்ள விஜய், முதல் முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் ‘மெர்சல்’ எப்படி என்பதை பார்ப்போம்.


5 ரூபாய் வாங்கிக்கொண்டு மருத்துவம் பார்க்கும் டாக்டர் விஜய்க்கு வெளிநாட்டில் விருது வழங்கப்படுகிறது. அந்த விருதை வாங்கும் விஜய், அங்கே காஜல் அகர்வாலை சந்திப்பதுடன், தனக்கு தெரிந்த மேஜிக்கை செய்து அவரை அசத்துகிறார். தன்னை ஒரு டாக்டர் என்பதை அவரிடம் சொல்லாமல், மேஜிக் நிபுணர் என்று சொல்லிக்கொள்வதோடு, பெரிய டாக்டர் ஒருவரை மேஜிக் என்ற பெயரில் கொலை செய்துவிட்டு அங்கிருந்து சென்னைக்கு எஸ்கேப் ஆகிறார். அதோடு, சென்னையில் ஒரு டாக்டர், மருத்துவமனையின் எச்.ஆர், ஏஜெண்ட், ஆம்புலன்ஸ் டிரைவர், ஆகியோரை கடத்தி கொலை செய்யும் விஜயை, போலீஸ் அதிகாரியான சத்யராஜ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


இதற்கிடையே, விஜயை டிவி சேனல் ஒன்றில் பார்க்கும் எஸ்.ஜே.சூர்யா, அதிர்ச்சியடைவதோடு, விஜயை கொலை செய்ய ஆட்களையும் அனுப்புகிறார். எஸ்.ஜே.சூர்யாவின் ஆட்களிடம் சிக்கிக்கொண்டு விஜய் உயிருக்கு போராட, அங்கே எண்ட்ரியாகிறார் மற்றொரு விஜய். அவர் டாக்டர் விஜயை காப்பாற்ற, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும், பிளாஸ்பேக்கும் தான் ‘மெர்சல்’ படத்தின் கதை.


மாஸ் ஹீரோவை வைத்து, ஒரு மாஸான பொழுது போக்கு படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் அட்லி, அதில் சமூகத்தில் நடக்கும் தவறை ரொம்ப அழுத்தமாகவே சுட்டிக்காட்டியிருக்கிறார்.


படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இருந்தாலும், முழு படத்திலும் விஜய் தான் நிறைந்திருக்கிறார். தாடி, முறுக்கு மீசையுடன் மதுரை தளபதியாக வரும் விஜய் ஆகட்டும், வெளிநாட்டு விமான நிலையத்தில் தமிழனாக ஜொலிக்கும் மருத்துவர் விஜய், மேஜிக் செய்து அசத்தும் விஜய், என மூன்று வேடங்களையும் ரசிகர்கள் ரசிக்கும்படி செய்திருக்கிறார் விஜய். துள்ளல் நடனம், அதிரடி ஆக்‌ஷன், என வலம் வரும் விஜய், தனது எனர்ஜியால் படம் பார்க்கும் ரசிகர்களையும் எனர்ஜியாக வைத்திருக்கிறார்.


சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்களுக்கும் தலா ஒரு பாடல் என்று பிரித்துக் கொடுத்ததோடு சரி, மற்றபடி படத்தின் முக்கிய காட்சிகள் எதிலுமே அவர்கள் சேர்க்கப்படவில்லை. சத்யராஜுக்கும் ஹீரோயின்களின் நிலமை தான்.


ரொம்ப ஸ்டைலிஷான வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தாலும், ரசிகர்கள் கண்ணுக்கு அவர் நடிகராக அல்லாமல் ஆர்வக் கோளாறாகவே தெரிகிறார். தனது முழு நடிப்பையும் தனது முகத்தில் மட்டுமே காட்டும் எஸ்.ஜே.சூர்யா, இதுவரை விஜய் படத்தில் வந்த வில்லன்களிலேயே செம மொக்கையான வில்லனாக இருக்கிறார்.

ஆரம்பத்தில் தனது சிரிப்பு வெடியை கொளுத்தி போடும் வடிவேலு, பிறகு புஸ்பானமாகி மறைந்துவிடுகிறார்.


ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம். அதிலும் ஆளப்போறான் தமிழன் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.


ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்னுவுக்கு முதல் படம் என்றே சொல்ல மாட்டார்கள், அந்த அளவுக்கு இயக்குநர் அட்லிக்கு பெரிய ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். பாடல் காட்சிகளில் பிரம்மாண்டத்தை காட்டியிருப்பவர், இரண்டு விஜயை காட்டும் இடங்களில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.


ஒரு நடிகருக்கு ஹீரோயிஷத்தை காட்ட பெரிய அளவில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ள இயக்குநர் அட்லி, அதே சமயத்தில், அந்த ஹீரோவை ரசிகர்கள் மட்டும் இன்றி பொது மக்களும் ரசிக்கும்படி, சமூக பிரச்சினைப் பற்றி நேர்த்தியாக பேச வைத்திருக்கிறார்.


இன்று மருத்துவத் துறையில் நடக்கும் பல மோசடிகளில், தனியார் மருத்துவமனைகளின் பகல் கொள்ளை மிகப்பெரிய மோசடியாகும். இதை ஏற்கனவே ஒரு சில படங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், அதற்கு அட்லி அமைத்திருக்கும் வேறு விதமான திரைக்கதையும், காட்சிகள் அமைப்பும் படத்தை படு சுவாரஸ்யமாக நகர்த்துகிறது.


”சிசரியன் என்றால் இப்போ ஆச்சரியப்படுவாங்க, ஆனா 30 வருஷத்துக்கு பிறகு நார்மல் டெலிவரி என்றால் தான் ஆச்சரியப்படுவாங்க”, ”நோய் இல்லாதவங்களையும் நோயாளிக்குறது தான் மெடிக்கல் ஜெக்கப்” போன்ற வசனங்களால் மருத்துவ துறை தவறுகளை சுட்டிக்காட்டியிருக்கும் இயக்குநர் அட்லி, டிஜிட்டல் மணி, ஜி.எஸ்.டி என்று அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளுக்கும் சவுக்கடி கொடுத்திருக்கிறார்.


டாக்டர், மேஜிக் கலைஞர் என்று ஆரம்பம் முதலே அமர்க்களப்படுத்தும் விஜய் ஒருவரா அல்லது இரட்டையர்களா, என்று ரசிகர்களை சில நிமிடம் யோசிக்க வைக்கும் அட்லி, எந்த இடத்தில் அந்த உண்மையை சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும் என்பதில் ரொம்ப தெளிவாக இருக்கிறார். அதேபோல், தாடி, முறுக்கு மீசை வைத்த மதுரை தளபதி விஜயின் எபிசோட்டையும் நேர்த்தியாக கையாண்டிருப்பவர், அவரது பிளாஸ் பேக்கை எந்த இடத்தில் காட்ட வேண்டும் என்பதிலும் தெளிவாக செயல்பட்டிருக்கிறார்.


விஜயின் ரசிகர்களுக்கு பிடித்தவாறு மாஸ் அம்சங்கள் நிறைந்த படமாக இப்படத்தை இயக்கியுள்ள அட்லி, அதே சமயம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பிடித்த ஒரு படமாகவும் இப்படத்தை கொடுத்திருக்கிறார்.மொத்தத்தில், ‘மெர்சல்’ ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களுக்கான முழு பொழுதுபோக்கு படமாக உள்ளது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...