Friday, 12 January 2018

குலேபகாவலி விமர்சனம்

தேவி என்ற வெற்றிப் படத்தின் மூலம் நடிகராக ரீ எண்ட்ரி ஆன பிரபு தேவாவின் வெற்றி பயணம் இந்த ‘குலேபகாவலி’மூலம் தொடருமா?, என்பதை பார்ப்போம்.

இந்தியாவில் இருந்து வெளியேறும் வெள்ளைக்காரனிடம் இருந்து வைர கற்களை அபேஷ் பண்ணும் இந்தியர் ஒருவர், அதை குலேபகாவலி என்ற ஊரில் புதைத்து விட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிடுகிறார். இந்த விஷயம் அவரது பேரனுக்கு தெரிய வர, தாத்தா புதைத்து வைத்த வைரத்தை எடுக்கும் முயற்சியில் அவர் இறங்குகிறார். இதற்காக கோயில் சிலைகளை திருடும் பிரபு தேவாவையும், ஆண்களை ஏமாற்றி அவர்களின் பொருட்களை அபேஷ் பண்னும் ஹன்சிகாவையும் தேர்வு செய்யும் அவர், தனது அடியாள் முனிஷ் காந்தையும் அவர்களுடன் அனுப்புகிறார். இடையில் கார்களை திருடி விற்கும் ரேவதியும் இவர்களுடன் சேர்ந்துக்கொள்கிறார்.

வைர புதையலை எடுக்கும் முயற்சியில் ஈடுபடும் இந்த நான்கு பேரும், அதை எடுத்தார்களா இல்லையா என்பது தான் ‘குலேபகாவலி’ படத்தின் கதை.

பிரபு தேவா, கதை தேர்வில் அதிக கவனம் செலுத்துவார், என்ற எதிர்ப்பார்ப்பில் தியேட்டருக்கு சென்ற அனைவருக்கும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. அந்த அளவுக்கு ரசிகர்கள் பார்த்து பார்த்து சலித்து போன பழைய காமெடி பார்மெட்டில் படம் இருக்கிறது.

படத்தில் ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் இருந்தாலும், காமெடிக்கு காட்சிகள் எதுவுமே ரசிக்கும்படி இல்லை. ஹீரோவாக அல்லாமல், கதாபாத்திரமாக அடக்கி வாசித்திருக்கும் பிரபு தேவா அளவான நடிப்பை வெளிப்படுத்தி, மற்ற நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ஐய்யோ பாவம் ஹன்சிகா என்று தான் சொல்ல வேண்டும். ஹீரோயின் என்பதற்காக இரண்டு பாடல்களில் நடனம் ஆட வைத்திருக்கிறார்களே தவிர, மற்றபடி அம்மணிக்கு எந்த வேலையும் இல்லை.

முதல் முறையாக காமெடிக்கு முயற்சி செய்திருக்கும் ரேவதி, யோகி பாபு, முனிஷ் காந்த், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் காமெடி என்ற பெயரில் கடிப்பதையே அதிகம் செய்கிறார்கள். வில்லனாக நடித்துள்ள ஆனந்தராஜின் வசனங்கள் மட்டும் சில இடங்களில் நம்மை சிரிக்க வைத்து ஆறுதல் படுத்துகிறது.


விவேக் மெர்வின் இசையில் ஆரம்ப பாடலும், அந்த பாடலை படமாக்கிய விதமும் அட்டகாசமாக இருந்தாலும், மற்ற பாடல்கள் அனைத்தும் தேவையில்லாததாகவே இருக்கின்றன. ஆர்.எஸ்.ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ரொம்ப கலர்புல்லாக இருக்கிறது.


கார் சேசிங், கடத்தல், ஆக்‌ஷன், காதல் என்று அனைத்திலும் காமெடி மசாலா தூவப்பட்டிருந்தாலும், நமக்கு தும்பல் வருகிறதே தவிர சிரிப்பு தான் வர மாட்டேங்குது. படத்தில் ரசிக்கும்படியான காட்சிகள் என்றால், பிரபு தேவாவின் அறிமுகமும், யோகி பாபுவின் இடைவேளை ரைட்டிங்கும் தான். அதை தவிர படத்தில் புதிதாக எதுவுமில்லை. ரசிக்கும்படியாகவும் ஒன்றுமில்லை.

பிரிட்டிஷ் காலம், வெள்ளக்கார துரை, அவரிடம் இருந்து வைரத்தை அபேஷ் பண்னும் இந்தியர், என்று அமர்க்களமாகவும், ஆர்வமாகவும் படத்தை தொடங்கும் இயக்குநர் எஸ்.கல்யாண், தனது அடுத்த அடுத்த காட்சிகளின் மூலம் ரசிகர்களை கடுப்பேற்றுகிறார்.

இயக்குநர் கல்யாண் கதையையும், காட்சிகளையும் யோசித்ததைவிட, படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கார்கள் பற்றி தான் அதிகமாக யோசித்திருக்கிறார். அந்த அளவுக்கு பல பழமையான கார்களை பயன்படுத்தியிருப்பவர். பாடல் காட்சியில் கூட கார்களை வைத்து செட் போட்டிருக்கிறார்.

மொத்தத்தில், கலர்புல்லான படமாக இந்த ‘குலேபகாவலி’ இருந்தாலும், கதையும், காமெடி என்ற பெயரில் வரும் காட்சிகளும் ரசிகர்களுக்கு தலைவலியை தான் கொடுக்கிறது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...