Sunday, 28 January 2018

மன்னர் வகையறா விமர்சனம்

பெரிய பட்ஜெட் படங்களுக்கு மத்தியில், பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியாகியிருக்கும் ‘மன்னர் வகையறா’ எப்படி என்பதை பார்ப்போம்.ஊரில் மரியாதை மிக்கவரான பிரபு - மீரா கிருஷ்ணன் தம்பதிக்கு இரண்டு மகன்கள் அவர்களில் மூத்தவர் கார்த்திக்குமார், இளையவர் ஹீரோ விமல். அதே ஊரைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் - சரண்யா பொண்வன்னன் தம்பதிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். மகன் வம்ஷி கிருஷ்ணா, முத்த மகள் சாந்தினி, இளையமகள் ஹீரோயின் ஆனந்தி.சட்டப் படிப்பை முடித்துவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் விமல், கேப்பில் ஆனந்தியை காதலிக்கிறார். அவரும் விமலை காதலிக்கிறார். இதற்கிடையே வில்லனின் தம்பிக்கும் ஆனந்தியின் அக்கா சாந்தினிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. இதை அறிந்த சாந்தினியின் காதலரான விமலின் அண்ணன் கார்த்திக்குமார் விஷம் குடித்துவிடுகிறார். அண்ணனை காப்பாற்றும் விமல், அவரது காதலியை அவருடன் சேர்த்து வைப்பதற்காக, திருமணத்தன்று மண்டபத்துக்குள் புகுந்து பெண்ணை தூக்கி, அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்துவிடுகிறார். அதுவரை ஆந்தியின் அக்கா தான் சாந்தினி என்பதை அறியாத விமல், அவரை மண்டபத்தில் இருந்து அழைத்துச் செல்லும் நேரத்தில் அதை தெரிந்துக்கொள்கிறார்.இதனால் கடுப்பாகும் வம்ஷி கிருஷ்ணா, அதே மாப்பிள்ளைக்கு தனது இளைய தங்கையான ஆனந்தியை நிச்சயம் செய்கிறார். அதே சமயம், கார்த்திக்குமார் - சாந்தினி ஜோடியை மன்னித்து இரண்டு குடும்பமும் அவர்களை ஏற்றுக்கொள்ள, விமலின் காதல் விவகாரம் பிரபுவுக்கு தெரிந்துவிடுகிறது. ஏற்கனவே ஒரு திருமணத்தால் அந்த குடும்பத்திற்கு செய்த துரோகம் போதும், மீண்டும் அவர்களது திருமணத்தில் பிரச்சினை வரக்கூடாது என்று நினைக்கும் பிரபு, விமலையும் கண்டிக்கிறார். அப்பாவின் எண்ணத்தை புரிந்துக்கொள்ளும் விமல், தனது காதலை கைவிட முடிவு செய்துவிட, ஆனந்தி மட்டும் திருமணத்தன்று அதிரடியான முடிவு எடுக்க, அது என்ன என்பதும், அதனால் ஆனந்தி - விமல் காதல் என்ன ஆனது என்பதே ‘மன்னர் வகையறா’ படத்தின் கதை.தனக்கு என்று தனி ஸ்டைல் வைத்திருக்கும் விமல், தனது பாணியிலேயே காமெடி, காதல், செண்டிமெண்ட் என்று அசத்துகிறார். பிரபு, ஜெயப்பிரகாஷ், சரண்யா பொன்வன்னன் உள்ளிட்ட முத்த நடிகர்களுக்கும், கார்த்திக் குமார், வம்ஷி கிருஷ்ணா, வில்லன் வேடத்தில் நடித்தவர் என்று இளைய நடிகர்கள் என்று அனைவருக்கும் வழி விட்டுவிட்டு, கதைக்கான நாயகனாக வலம் வருகிறார்.இளம் ஹீரோயினாக இருந்தாலும் இறுக்கமான வேடங்களில் நடித்து வந்த ஆனந்தி, முதல் முறையாக துள்ளல் நாயகியாக துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கல்லூரி, வீடு மற்றும் விமலிடம் அவர் செய்யும் சேட்டைகள் அனைத்து சக்கரைக்கட்டியாக இணிக்கிறது.பிரபு, ஜெயப்பிரகாஷ், சரண்யா பொன்வன்னண், மீரா கிருஷ்ணன், கார்த்திக்குமார், வம்ஷி கிருஷ்ணா, நீலிமா ராணி உள்ளிட்ட அனைவரும் கூட்டம் கூட்டமாக வந்து நம்மை குஷிப்படுத்துகிறார்கள். குறிப்பாக, சாந்தினியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வம்ஷி கிருஷ்ணாவுக்கு தெரியாமல் செல்ல முயற்சிக்கும் காட்சியில், பாட்டி கூட தனது சுட்டித்தனத்தைக் காட்டி நம்மை குளுங்க குளுங்க சிரிக்க வைக்கிறார்.சரண்யா - ஜெயப்பிரகாஷ் குடும்பத்திற்கு தாங்களும் சலைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் பிரபு தலைமையில் இருக்கும் நட்சத்திரங்களும் காமெடி சரவெடியை கொளுத்தி போடுகிறார்கள். அதிலும், அவரது குடும்பத்தில் வேலைக்காரராக இருக்கும் சிங்கம் புலி, அவ்வபோது கொடுக்கும் டைமிங் வசனம் திரையரங்கையே சிரிப்பால் அதிர வைக்கிறது. அவர் அடிக்கடி கார்த்திக்குமாரை பார்த்து “வெள்ளையா இருக்கீங்க இதுக்கூட தெரியாதா...” என்று கேட்கும்போதெல்லாம், சிரிப்பு நமக்கு குபீரென்று வந்துவிடுகிறது.ரோபோ சங்கருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும், அதை அவர் ஒரு சில இடங்களில் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மற்ற இடங்களில் காமெடி என்ற பெயரில் நம்மை கடுப்பேற்றவும் செய்கிறார். ஒரு காட்சியில் வந்தாலும் தன் வேலையை சிறப்பாக செய்துவிட்டு போகிறார் யோகி பாபு.ஜேக்ஸ் பீஜாயின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் தான். அதிலும் இயக்குநர் பூபதி பாண்டியன் எழுதிய “என் அண்ணன பத்தி கவல இல்ல...” பாடல் தாளம் போட வைக்கிறது.குடும்ப செண்டிமெட்ண்ட்டோடு கலந்த காதல் கதையை கலகலப்பான காமெடிப் படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் பூபதி பாண்டியன், சில காட்சிகளில் ஜாதியை தூக்கி வைத்து பேசுவதோடு, பெயருடன் ஜாதியை சேர்த்து அழைப்பதில் தவறு ஏதும் இல்லை, என்ற ரீதியில் வசனங்களை வைத்திருக்கிறார். அதுமட்டும் இன்றி, காவல் நிலையங்களில் நடக்கும் கலப்பு திருமணங்களுக்கு எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார். (எதுக்கு இந்த கொலவெறியோ)குறை என்றால், முதல் பாதியில் ஹீரோயின் ஆனந்தியை அதிகமாக பேச வைத்தது தான். அதில் கொஞ்சம் கத்திரியை போட்டிருந்தால் ரசிகர்கள் சற்று சமாதானம் அடைந்திருப்பார்கள். அதேபோல், ரோபோ சங்கர் தலையில் பெரிய பளுவை தூக்கி வைத்ததை தவிர்த்துவிட்டு, அந்த பளுவில் பாதியை சிங்கம் புலியிடம் கொடுத்திருந்தால், ரசிகர்கள் இன்னும் சந்தோஷமடைந்திருப்பார்கள்.இருந்தாலும், காட்சிக்கு காட்சி ஏராளமான ரசிகர்களை களம் இறக்கி படம் முழுவதும் நம்மை சிரிக்க வைக்கும் இந்த ‘மன்னர் வகையறா’ படம் பார்ப்பவர்களை திருப்திப் படுத்தும் காமெடி வகையறாவாக உள்ளது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...