Friday, 23 February 2018

6 அத்தியாயம் விமர்சனம்

குறும்படங்களை தங்களுக்கான விசிட்டிங் கார்டாக பயன்படுத்தி வந்தவர்கள், இனி அந்த குறும்படங்கள் மூலமாக இயக்குநர் என்ற அங்கீகாரத்தை பெறும் புதிய முயற்சியாக வெளியாகியிருக்கும் படம் தான் ‘6 அத்தியாயம்’.6 கதைகள், 6 இயக்குநர்கள் ஆனால் ஆறும் ஒரே உணர்வை வெவ்வேறு களத்தில் கொடுப்பது தான் இந்த 6 அத்தியாயத்தின் சிறப்பு.ஆறு படங்களும் குறும்படங்கள் தான் என்றாலும், அனைத்தும் நம்மை சீட்டில் கட்டி வைத்தது போல ரொம்ப சுவாரஸ்யமாக நகர்கிறது.சூப்பர் ஹீரோ, இனி தொடரும், மிசை, அனாமிகா, சூப் பாய் சுப்பிரமணி, சித்திரம் கொள்ளுதடி, என ஆறு குறும்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தாலும், அவைகளின் கிளைமாக்ஸ் மட்டும் ஒன்றாக இறுதியில் வருகிறது. இது தான் இப்படத்தை உருவாக்கிய குழுவின் அசத்தல் யுக்தி என்று சொல்லலாம்.தன்னை ஒரு சூப்பர் ஹீரோ என்று சொல்லிக் கொள்கிறார் தமன். அவர் எதிரே இருக்கும் மருத்துவரோ நான் எப்படி நம்புவது என்று கேட்க, சில பத்திரிகை செய்திகளை அவர் சொல்கிறார், விசித்திரமாக இருந்தாலும் சற்று குழப்பமாக இருக்கும் நேரத்தில் சட்டென்று அந்த இடத்தில் இருந்து காணாமல் போகும் தமன் சில நிமிடங்களில் திரும்ப வந்து, ”ஸ்பென்சர் பிளாசவில் யாரோ வெடிகுண்டு வைத்துவிட்டார்கள், அதை எடுத்து கடலில் போட்டுவிட்டு வந்தேன்”, என்று சொல்ல, மருத்துவரே சற்று ஜர்க் ஆக, தமன் சொன்ன விஷயம் அப்படியே பிளாஷ் நியூஷாக வருகிறது. உடனே தமன் சொல்வதை நம்பும் டாக்டருக்கு சின்ன டவுட். தனக்கு தெரிந்த நபர்களுக்கு ஆபத்து ஏற்படும் போது தான் அது தனக்கு தெரிய வரும், என்று தமன் கூறியதை நினைத்து பார்ப்பவர், தனக்கு ஆபத்து ஏற்படும் போதும் தமன் வருவார், என்று நினைத்து அவர் ஒரு ஆபத்தில் இறங்க, அங்கே தமன் வந்தாரா இல்லையா என்பது தான் அந்த கதையின் முடிவு.இப்படி ஒவ்வொரு படமும் ஒரு விதத்தில் சஸ்பென்ஸும், திகிலுமாக நகர்ந்துக் கொண்டிருக்க, ‘சூப் பாய் சுப்பிரமணி’ என்ற அத்தியாயம், இருக்கத்தில் இருக்கும் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. ”பெண்களிடம் நான் நெருங்கி பேசினாலே ஒரு பேய் வந்து வேலைய காட்டுது சாமி...எதாவது பண்ணுங்க” என்று அப்பாவியாக அப்படத்தின் ஹீரோ நம்புதிரியிடம் கேட்பதும், அதற்கு நம்புதிரி எடுக்கும் நடவடிக்கையும், சிரிப்பாய் சிரிக்க வைக்கிறது.இந்த படத்தின் ஆறு கதைகளையும் ஒரு திரைப்படமாக ஒருங்கிணைத்த குழுவும், இப்படத்தை தயாரித்த சங்கர் தியாகராஜனும் தமிழ் சினிமாவில் வேறு ஒரு கதவை திறந்துவிட்டிருக்கிறார்கள். இதில் வந்த கதைகளின் இயக்குநர்கள் கேபிள் சங்கர், அஜயன் பாலா உள்ளிட்ட அனைத்து இயக்குநர்களும் ஒரு விஷயத்தை எப்படி சொன்னால் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதை ரொம்ப சரியான முறையில் சொல்லியிருக்கிறார்கள்.ஒரு அத்தியாயம் முடிந்தவுடன், அதன் முடிவு என்னவாக இருக்கும் சிந்தனையில் ரசிகர்கள் ஈடுபடும் வகையில் அதன் திரைக்கதை அமைந்திருக்க, அடுத்ததாக தொடங்கும் அத்தியாயம் அந்த சிந்தனையில் இருந்து நம்மை வெளிவரச் செய்துவிடுகிறது. இப்படி ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் ரசிகர்களிடம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த, இறுதியில் வரும் ஆறு கதைகளின் கிளைமாக்ஸும், ஒரு முழு திரைப்படத்தைப் பார்த்த உணர்வை கொடுப்பது தான் இப்படத்தின் மிகப்பெரிய பிளஷ்.பல கோடி போட்டு திரைப்படம் எடுத்தால் தான் அவை தியேட்டரில் ஓடும் என்பதை மாற்றி, சில லட்சங்களில் எடுக்கும் குறும்படங்களையும், ஒரு திரைப்படத்தின் அளவுக்கு மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்பதை செய்துக்காட்டிய இந்த ‘6 அத்தியாயம்’ குழுவுக்கு பலமாக அப்ளாஷ் கொடுக்கலாம்.சில கதைகளில் சில இடங்களில் சில குறைபாடுகள் இருந்தாலும், இந்த புதிய முயற்சி நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய முயற்சி. ஏதோ குறும்படத்தை எடுக்குறோம், அதை தியேட்டரில் ஓட்ரோம் என்ற பெயரில் ரசிகர்களை நோகடிக்காமல், கொடுத்த காசுக்கு அவர்களை திருப்திப்படுத்தியிருக்கும் இந்த ‘6 அத்தியாயம்’ படத்தை பார்க்கும் ரசிகர்கள், அப்ளாஷ் பண்ணாமல் தியேட்டரை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்பது உறுதி.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...