Thursday, 26 April 2018

‘தியா’ விமர்சனம்

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் ‘கரு’ என்ற பெயரில் உருவான படம் தான், ‘தியா’ என்ற பெயர் மாற்றத்துடன் வெளியாகியிருக்கிறது.கல்லூரி படிக்கும் போது ஹீரோ நாக சவுரியாவை காதலிக்கும் ஹீரோயின் சாய் பல்லவி, படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே கர்ப்பமடைந்துவிடுகிறார். இந்த விஷயம் இருவரது பெற்றோருக்கும் தெரியவர, காதலுக்கு பச்சைக்கொடி காட்டுபவர்கள், அதே சமயம் படிப்பை முடித்து வாழ்க்கையில் செட்டிலான பிறகு தான் திருமணம், என்ற முடிவுக்கு வருவதோடு, சாய் பல்லவியின் வயிற்றில் வளரும் கருவை கலைத்துவிட வேண்டும் என்ற முடிவுக்கும் வந்துவிடுகிறார்கள்.இதில் சாய் பல்லவிக்கு விருப்பம் இல்லை என்றாலும், திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் பெற்றோர்களின் இந்த முடிவுக்கு ஹீரோ நாக சவுரியா சம்மதம் தெரிவித்துவிடுவதால், சாய் பல்லவியின் கரு கலைக்கப்படுகிறது. 5 வருடங்களுக்குப் பிறகு காதலர்கள் தம்பதிகளாகி தங்களது மண வாழ்க்கையை தொடங்கினாலும், கலைக்கப்பட்ட தனது கருவை மறக்க முடியாத சாய் பல்லவி, அந்த குழந்தைக்கு தியா என்று பெயர் வைப்பதோடு, அக்குழந்தையின் ஒவ்வொரு பருவத்தையும் ஓவியமாக வரைந்து அவரது நினைவோடு வாந்து வருகிறார். 5 வயது குழந்தையாக திடீரென்று எண்ட்ரியாகும் தியா பேபி, தனது தாத்தா, பாட்டி, மருத்துவர் என தான் கருவாக இருக்கும் போது, தான் அழிவதற்கு காரணமானவர்களை பேயாக பழிவாங்குகிறார்.இதனை அறிந்துக்கொள்ளும் சாய் பல்லவி, தியாவிடம் இருந்து தனது கணவரை காப்பாற்றுவதற்காக போராட, அவரது கணவரோ சாய் பல்லவி சொல்வதை நம்பால் உதாசினப்படுத்துகிறார். இறுதியில் தியா ஜெயித்தாரா, அவரது தாய் சாய் பல்லவி ஜெயித்தாரா என்பது தான் படத்தின் மீதிக்கதை.பேபியை பேயாக சித்தரித்திருக்கும் இயக்குநர் விஜய், தமிழ் சினிமாவில் வெளியாகும் பேய்ப் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக இந்த ‘தியா’-வின் திரைக்கதையை கையாண்டிருக்கிறார்.படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே தமிழ் சினிமாவில் பிரபலமான சாய் பல்லவி, தனது முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருப்பதோடு, அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து அளவாக நடித்திருக்கிறார். தனது கணவரது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்ததும் அவரை காப்பாற்ற துடிதுடிக்கும் சாய் பல்லவி, அதே சமயம், கருவில் கலைந்த தனது குழந்தை மானுஷுமாக வந்தாலும், அவரையும் பாசத்தோடு பார்க்கும் காட்சிகளில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்துகிறார். இருந்தாலும், சாய் பல்லவியின் திறமையை முழுவதுமாக காண்பிக்க இதில் வாய்ப்பு குறைவு தான் என்றாலும், கிடைத்த இடங்களில் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.ஹீரோ நாக சவுரியாவும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிரார். அம்மா என்ற ஒரே ஒரு வார்த்தையை மட்டுமே வசனமாக பேசும் தியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுமி வெரோனிகா அரோரா, தனது கண்களாலேயே தனது அம்மாவுடன் வாழ முடியாத தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.ஒளிப்பதிவாளர் நீரோவ் ஷாவின் கேமரா, பகல் நேரங்கலில் கூட நம்மை திகிலடைய வைக்கும் அளவுக்கு செயல்பட்டிருக்கிறது. எந்தவிதமான கிராபிக்ஸ் காட்சியோ, அளப்பறை காட்சிகளோ இல்லை என்றாலும், நமது உடலை அவ்வபோது சிலிர்க்கச் செய்துவிடுகிறது இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை.தொழில்நுட்பங்களை கையாண்ட முறை, காட்சிகளை நகர்த்திய விதம் என்று மேக்கிங்கில் அசத்தியிருக்கும் விஜய், ஒன்னும் இல்லாத விஷயத்தை ”ஓஹோ.....என்று பேசுவது போல” இப்படத்தினை கையாண்டிருப்பதையும் மறுக்க முடியவில்லை.சப்-இன்ஸ்பெக்டராக வரும் ஆர்.ஜே.பாலாஜியின் வேடம் ஏற்றுக்கொள்ள முடியாதபடி இருந்தாலும், அவரால் சில இடங்களில் ரசிகர்கள் குளுங்கு குளுங்கி சிரித்து விடுகிறார்கள். நிழல்கள் ரவி, ரேகா உள்ளிட்ட படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்கள் தங்களது வேடத்தை உணர்ந்து நடித்திருந்தாலும், சந்தான பாரதியின் வேடத்திற்கு திரைக்கதையில் முக்கியமான இடம் இருப்பது போல காட்டிவிட்டு பிறகு அவரை எதற்கும் பயன்படுத்தாமல் போவது திரைக்கதையை சற்று நொண்ட வைத்துவிடுகிறது.கருவிலே கலைக்கப்படும் குழந்தைகளில், இந்திரா காந்தியோ, சச்சின் டெண்டுல்கரோ என்று பல சாதனையாளர்கள் உருவாகலாம், என்று படத்தின் இறுதியில் வாக்கியத்தை போடும் இயக்குநர் விஜய், இப்படி தவறான முறையில் பிறந்து, குப்பைத் தொட்டியிலும், சாக்கடைகளிலும் வீசப்பட்டு கஷ்ட்டப்படும் குழந்தைகளைக் காட்டிலும், கருவிலே கலய்ந்து போவது எவ்வளவோ மேல் என்பதை உணர்ந்தால் சரி.தன்னை கருவில் அழித்தவர்களை பழிவாங்கும் தியா, தவறான முறையில் தான் உருவாக காரணமாக இருந்த தனது தாயை மட்டும் மன்னித்து அவர் மீது பாச மழை பொழிவது சினிமாத்தனமாக இருந்தாலும், தியா வரும் காட்சிகளில் இசைக்கும் அந்த குதிரை பொம்மை, கார் சைல்டு லாக் போன்ற சின்ன சின்ன விஷயங்கள் கூட படத்தில் முக்கிய பங்கு வகிப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.இப்படி தவறான முறையில் கரு கலைப்பில் ஈடுபடுபவர்களுக்கு சவுக்கடியாக உள்ள இந்த ‘தியா’, பெண்களின் தாய் பாசத்தையும் பக்குவமாக சொல்லியிருக்கிறது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...