Saturday, 30 June 2018

சமூகசேவகி ஷீபா லூர்தஸ்

மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற முன்னாள் அழகி, எழுத்தாளர், உளவியல் நிபுணர், மனித வள மேம்பாட்டு ஆலோசகர், நாத்திகவாதி, ஆவணப் படம் மற்றும் குறும் பட இயக்குநர், சமூக சேவகி, மனித உரிமை போராளி என பன்முக ஆளுமையுடன் வலம் வருபவர் ஷீபா லூர்தஸ்(Dr.Sheeba Lourdhes). இந்த தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக சுவீடன் நாட்டிலிருந்து தமிழகம் வந்து களப்பணியாற்றுபவர். தன்னுடைய பிறந்த நாளையும் தன்னுடைய ரோல்மாடலாக இருக்கும் அப்துல்கலாம் மற்றும் பெரியாரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளையும் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுடனும், ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடனும் கொண்டாடுவதில் பெருவிருப்பமுடையவர் முனைவர் ஷீபா. இவர் அண்மையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் விழாவிற்கு வந்திருந்த போது சந்தித்து உரையாடினோம்.


அழகி பட்டம் வென்ற நீங்கள் பேஷன், மாடலிங், திரைத்துறை போன்றவற்றில் பயணிக்காமல் மக்களுக்கு சேவையாற்றவேண்டும் என்று பயணத்தை திசை மாற்றிக் கொண்டதேன்?


நான் கோவையில் பிறந்து, சுவீடன் நாட்டில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தில் அகதிகளுக்கான உளவியல் பயிற்சி அளிக்கும் அலுவலராக பணியாற்றி வருகிறேன். உலகத்தின் பல நாடுகளுக்கு பயணித்து அகதிகளாக இருக்கும் மக்களின் மனதை ஆக்கிரமித்திருக்கும் மரண பயம் குறித்த உளவியல் ரீதியிலான குறைபாடுகளை நம்பிக்கையான மற்றும் அரவணைப்புடன் கூடிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அவர்களின் எஞ்சியுள்ள வாழ்நாட்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் அளவிற்கு மனதளவில் தயார் படுத்துகிறோம்.


என்னுடைய வாழ்க்கையில் இளமைப் பருவத்தில் அழகி பட்டம் வெல்லவேண்டும். பேஷன் மற்றும் மாடலிங் துறையில் கொடி கட்டிப் பறக்கவேண்டும் என்பதெல்லாம் கனவாகவோ, லட்சியமாகவோ இருந்ததில்லை. சென்னை விமான நிலையத்தில் நிகழ்ச்சி மேலாளர் ஒருவர் என்னை சந்தித்து, உங்களின் உடலமைப்பு மற்றும் தோற்றப்பொலிவு நன்றாக இருக்கிறது ஏன் அழகிப் போட்டியில் கலந்துகொள்ளக்கூடாது? என கேட்டார். அப்போது அதை சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டேன். இதை ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்ளலாமே? என எண்ணத்தில் தான் அந்த அழகி போட்டியில் கலந்துகொண்டேன்.


அழகி போட்டி பற்றிய எந்தவொரு விதிமுறையையும் அது வரை நான் அறிந்திருக்கவில்லை. இந்த நிலையிலேயே மொத்தம் உள்ள 32 சுற்றுகளில் ஸ்கின் டெஸ்ட், போட்டோஜெனிக் டெஸ்ட், பொதுஅறிவு சுற்று, டேலண்ட் ரவுண்ட், எத்னிக் ரவுண்ட் என பல சுற்றுகள் வரை வெற்றிப் பெற்று முன்னிலையில் வந்துவிட்டேன். அப்போது ஒரு நாள் கேட்வாக் சுற்று என்றார்கள். அதுவரை கேட்வாக் என்றால் என்ன? என்பதையே அறிந்திருக்கவில்லை. ஒரே நாள் இரவில் அதைப் பற்றித் தெரிந்துகொண்டு பயிற்சிப் பெற்று அதில் வென்றேன். அந்த அழகி பட்டம் வென்ற தருணங்கள் இன்று வரை ஆனந்தமான அனுபவத்தையும் தன்னம்பிக்கை இருந்தால் வெற்றிப் பெறலாம் என்ற உணர்வையும் எமக்குள் ஏற்படுத்தியதை மறக்க இயலாது.


அழகி பட்டம் வென்ற பிறகும் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. பேஷன் மாடலிங், திரைத்துறை மற்றும் காட்சி ஊடகங்களில் நுழைந்து ஜொலிக்கவேண்டும் என்ற எண்ணமும் இருந்ததில்லை. அத்துடன் அழகி பட்டம் வென்றுவிட்டோம் என்ற கர்வமும் எனக்கில்லை. அந்த தருணத்தில் சில தனியார் தொண்டு நிறுவனங்கள், மகளிர் அமைப்புகள், பெண்களுக்கான உரிமை குறித்து உரத்து பேசும் சமூக சிந்தனையாளர்கள் மற்றும் மனித உரிமை குறித்த அமைப்பினர் என்னை சந்தித்து, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் விழாக்களில் நீங்கள் கலந்து கொண்டு பேசினால் அது பெண்களுக்கும், அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் நல்லது நடக்கும் என்றார்கள். இது நல்ல யோசனையாக இருக்கிறதே என்று எண்ணி சமூக சேவையின் பக்கம் என்னுடைய கவனத்தை திருப்பினேன்.


உங்களின் சமூக சேவை குறித்து..?


நான் சுவீடனில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தில் மன நலம் மற்றும் மனித வளம் மேம்பாட்டிற்கான ஆலோசகராக இருந்து பணியாற்றிய போது சுவீடனை கடந்து செல்லும் ஏராளமான அகதிகளை, அவர்களின் மனதில் குடிக்கொண்டிருக்கும் போர் பற்றிய அச்சுறுத்தல்களை உளவியல் பயிற்சி அளித்து அவர்களை இயல்பான மனிதர்களாக்குகிறோம்.. இதனை ஏன் என்னுடைய நாட்டில், நான் பிறந்த இந்த தமிழ் மண்ணில் செய்யக்கூடாது என்று எண்ணி ஒவ்வொரு முறையும் தமிழகம் வந்து களப்பணியில் இறங்கி சேவை செய்து வருகிறேன்.

தமிழக மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். சில பிரச்சினைகள் விவாதத்திற்கு அப்பாற்பட்டவை. மக்களை மனரீதியாக மட்டும் பயிற்சி அளித்து உற்சாகமளிப்பதும் மட்டும் என்னுடைய வேலையல்ல. அத்துடன் இன்றைய தேதியில் தமிழகத்தில் நிலவும் அரசியல், அரசியல் சட்ட விதியில் மக்களுக்கு அளிக்கப்பட்ருக்கும் உரிமைகள், இதற்குரிய சட்ட விதிகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன். இதனால் மக்களுக்கு பல வகைகளில் ஆலோசனை தேவைப்படுகிறது. இது வளர்ந்த மக்களுக்கும் மட்டுமல்ல அனாதை ஆசிரமங்களில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அவர்களின் மனதில் நம்பிக்கையை விதைக்கும் விசயங்களிலும் ஆர்வம் காட்டி அவர்களிடமும் உரையாற்றி வருகிறேன்.


எழுத்தாளராக மாறி இலக்கியவாதியும் மிளிர்கிறீர்களே அதைப் பற்றி...?


தற்போது தத்துவம் சார்ந்த புத்தகத்தை எழுதியிருக்கிறேன். இதுவரை நான் பெற்ற அனுபவங்களிலிருந்து தான் அந்த நூலை எழுதியிருக்கிறேன். விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த புத்தகம் வெளியாவதில் எனக்கு ஒரு மனநிறைவு உண்டு. ஏனெனில் இது வரை நான் கடுமையாக உழைத்து சேகரித்த தரவுகள் மற்றும் அரிய விசயங்கள், நுட்பமான அணுகுமுறை ஆகியவை இதில் இடம்பெற்றிருக்கிறது. இது மக்களுக்கு பெரிதும் பயன்படும் என்ற நம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.


உங்களின் பார்வையில் சுவீடனைப் பற்றியும், அங்குள்ள மக்களைப் பற்றியும்..?


உலகத்தார்களின் பார்வையில் சுவீடன் ஒரு வளர்ச்சியடைந்த நாடு. செல்வ வளம் மிக்க நாடு. இலவசமாக வழங்கப்படும் தரமான கல்வி, இலவச உயர் தர சிகிச்சை ஆகியவை தான் தெரிகிறது. ஆனால் எங்களைப் போன்ற உளவியல் ஆலோசகர்கள் அந்த சமூகத்தில் இணைந்து பணியாற்றும் போது நாங்கள் சந்திக்கும் மக்களின் மனநிலையே வேறு. அங்கு மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலில் சிக்கி தவிக்கும் மக்கள் அதிகமுள்ள நாடு. அத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களும் அதிகம். இதற்கு காரணம் பெரும்பாலானவர்கள் யாருடனும் உரையாடாமல் தனித்தேயிருப்பது தான். அங்கு நிலவும் பருவ நிலையும் ஒரு காரணம்.


அங்கு 65வயதுள்ள பெண்கள் கூட கணவரின் அரவணைப்பு இல்லாமல் தனித்தே வாழ்வார்கள். ஆனால் இவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிவிட்டால் இவர்களை மீட்கவும், இவர்களிடம் பேசவும் யாருமில்லை.இது போன்ற தருணங்களில் அவர்களின் பிரச்சனைகளை கேட்பதற்கு ஒருவர் இருந்தாலே போதும். பிரச்சனையின் பாதிப்பு குறைந்துவிடும். இதுவே அவர்களின் தற்கொலை எண்ணத்தை மாற்றிவிடும் காரணி. நம்மால் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வை அளிக்க முடியாது. ஆனால் அவர்களிடம் பேசும் போது, பிரச்சனைகளின் தாக்கம் குறைந்து தவறான எணணங்களின் வீரியம் திசை திரும்பும். அதே போல் குடி பழக்கம், புகை பிடிக்கம் பழக்கம் போன்றவர்களையும் அந்த பாதிப்பிலிருந்து மீட்கிறோம். இது சுவீடன் மட்டுமல்ல பல ஐரோப்பிய நாடுகளிலும் இருக்கிறது.


ஒவ்வொரு பெண்களும் தன்னிறைவு பெறுவதற்காக என்ன மாதிரியான ஆலோசனைகளை வழங்குவீர்கள்?


பெண் என்பவர் ஆண்களுக்கு அடிமையானவர் என்ற எண்ணத்திலிருந்து முழுமையாக வெளியே வரவேண்டும். அதே போல் என்னுடைய இடம் சமையலறை என்றும், என்னால் இதனை தனித்து செய்ய இயலாது என்ற சிந்தனையிலிருந்தும் வெளியே வரவேண்டும். பெண்கள் முன்னேற வேண்டும் என்றாலோ அல்லது த்ன்னிறைவு பெறவேண்டும் என்றாலோ , அதற்கான வாய்ப்புகள் உருவாகவேண்டும் அல்லது வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும். அப்போது தான் அவர்களின் சக்தியை அவர்கள் உணர்வார்கள். முன்னேற்றம் பெறுவார்கள். தன்னிறைவு அடைவார்கள். அதிகாரத்திற்கும் வருவார்கள். சிறந்த சமுதாயத்தையும் உருவாக்க இயலும்.


எதிர்கால இலக்கு..?பெண்கள் அதிகாரத்திற்கு அதிகளவில் வரவேண்டும். அதற்கான கட்டமைப்பை உருவாக்குவதிலும், இதை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு தேவையான விழிப்புணர்வை அளிப்பதில் என்னுடைய பங்களிப்பும் இருக்கவேண்டும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். உலகளவிலான பெண்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்திலுள்ள பெண்களுக்கு இருக்கும் உளவியல் வலிமை வேறு எங்கும் இல்லை. ஆனால் இவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டேயிருக்கவேண்டும். பல்வேறு வகையில உற்சாகப்படுத்திக் கொண்டேயிருக்கவேண்டும். அதே போல் பெண்களின் உரிமை, குழந்தைகளின் உரிமை இது குறித்தும் போதிய அளவிற்கு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கான வழிவகைகளிலும் ஈடுபட திட்டமிட்டிருக்கிறேன்..

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...