விஜய் சேதுபதி தயாரித்து நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ஜூங்கா , மேலும் இந்த படத்தின் விமர்சனம் பாப்போம்.
இழந்த தனது பூர்வீக சொத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கும் ஹீரோ, அதை எப்படி செய்து முடிக்கிறார், என்பது தான் படத்தின் கதை. இது பல முறை நாம் பார்த்த பார்மட் என்பதால், இயக்குநர் கோகுல் சீரியஸாக அல்லாமல் முழுக்க முழுக்க காமெடியாக திரைக்கதையை கையாண்டிருக்கிறார்.
தாத்தா பேரு லிங்கா, அப்பா பேரு ரங்கா அதனால விஜய் சேதுபதி பேரு ‘ஜுங்கா’. இது தான் அவரது பெயருக்கான அர்த்தம்.
தனது அப்பாவும், தாத்தாவும் சென்னையில் பெரிய டான் என்பதோடு, அவங்களுக்கு நிறைய சொத்துக்கள் இருந்ததையும், அதை ஊதாரித்தனமாக செலவு செய்து அழித்ததையும் தனது அம்மா மூலம் தெரிந்துகொள்ளும் விஜய் சேதுபதி, தனது அப்பாவின் சொத்துக்களில் ஒன்றான சினிமா தியேட்டர் ஒன்றை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதற்காக, தனது தாத்தா மற்றும் அப்பா வழியில் சென்னையில் டானாக வலம் வருபவர், அவர்கள் செய்த ஊதாரித்தனத்தை செய்யாமல், கஞ்சத்தனத்தை கடைப்பிடித்து, தியேட்டரை மீட்பதற்காக பணம் சேர்க்கிறார்.
ஒரு வழியாக ஒரு கோடி ரூபாயை சேர்த்து, தியேட்டரை மீற்பதற்காக மில்லியனரான சுரேஷ் மேனனை சந்திக்கும் விஜய் சேதுபதி அவமானப்படுத்தப்பட, எப்படியும் என் தியேட்டரை மீட்டே தீருவேன் என்று சபதம் ஏற்பவர், சுரேஷ் மேனனின் பெண்ணான சாயீஷாவை கடத்தி அதன் மூலம் தியேட்டரை மீட்டு விடலாம் என்று முடிவு செய்ய, அப்போது தான் தெரிகிறது சாயீஷா பிரான்ஸில் உள்ள பாரிஸ் நகரில் படிக்கிறார் என்பது. கஞ்ச டானான விஜய் சேதுபதி தனது லட்சியத்திற்காக பாரிஸ் செல்ல, அங்கு அவரது கஞ்சத்தனத்திற்கு மட்டும் அல்லாமல் அவரது லட்சியத்திற்கும் பல சோதனைகள் வர, அவற்றையெல்லாம் அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதும், இறுதியில் சாயீஷாவால் அவருக்கு தியேட்டர் கிடைத்ததா இல்லையா என்பதும் தான் படத்தின் மீதிக்கதை.
இந்த படத்தின் கதையை பாரிஸில் சொல்ல வேண்டும் என்பதல்ல, மும்பையில் சொல்லியிருக்கலாம், பெங்களூரில் சொல்லியிருக்கலாம் அல்லது மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் கூட சொல்லி பட்ஜெட்டை குறைத்திருக்கலாம். ஆனால், இயக்குநர் கோகுல் பாரிஸில் வைத்து சொன்னதற்கு ஒரே ஒரு காட்சி மட்டுமே காரணம். ஆம், சாயீஷா பாரிஸில் படிக்கிறாங்க, என்பதை தெரிந்தவுடன் விஜய் சேதுபதியும், அவரது ஆட்களும் சென்னை பாரிஸ் கார்னருக்கு சென்று, ”வந்துட்டோம் எந்த இடத்துல இருக்கா” என்று கேட்பாங்க. இந்த ஒரே ஒரு காட்சிக்காக தான் இயக்குநர் பாரிஸ் சென்றிருப்பார் போல, மற்றபடி கதைக்கும் பாரிஸ் நகரும் எந்த சம்மந்தமும் இல்லாததோடு, படத்திற்கு அது எந்தவிதத்திலும் சப்போர்ட்டாகவும் இல்லை.
எப்போதும் போல விஜய் சேதுபதி படத்தை தனது தோள் மீது தூக்கி சுமக்கிறார். அவருக்கு தோள் கொடுக்கும் யோகி பாபு கூட சில இடங்களில் சோர்வடைந்து போனாலும், விஜய் சேதுபதி தனது நடிப்பைக் காட்டிலும் தனது வாயாலயே மொத்த படத்தையும் நகர்த்தி செல்கிறார். இது சில இடங்களில் படத்திற்கு பலம் சேர்த்தாலும், பல இடங்களில் “ரொம்ப பேசுறாங்கலே...” என்று ரசிகர்களை புலம்ப செய்கிறது.
பால் சிலை போல இருக்கும் ஹீரோயின் சாயீஷா நடனத்தில் அசத்துவதோடு, தனக்கு கிடைத்த சிறு சிறு இடங்களில் நடிப்பிலும் ஸ்கோர் பண்ண முயற்சிக்கிறார், ஆனால் அதற்கான இடத்தை தான் இயக்குநர் அவருக்கு கொடுக்கவில்லை.
சரண்யா பொன்வன்னன் பல படங்களில் அம்மாவாக நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவர் சென்னை அம்மாவாக முதல் முறையாக நடித்திருக்கிறார். அவரது நடிப்பும் டயலாக் டெலிவரியும் அசத்தல். அவருடன் விஜய் சேதுபதியின் பாட்டியாக நடித்திருப்பவர் பல இடங்களில் ஸ்கோர் செய்துவிடுகிறார்.
ரசிகனை ரசிக்கும் தலைவா....என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, முழுக்க முழுக்க ரசிகர்களை மனதில் வைத்து மட்டுமே இந்த படத்தின் காட்சியையும், திரைக்கதையையும் இயக்குநர் கோகுல் வடிவமைத்திருக்கிறார். அதற்காக பாரிஸ், சாயீஷா, விஜய் சேதுபதி போன்ற அம்சங்களை அவர் பெரிய அளவில் பயன்படுத்தாமல் விட்டிருப்பது திரைக்கதைக்கு பெரிய சறுக்கல்.
படத்தின் முதல் பாதி காமெடி கலந்த விறுவிறுப்போடு நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் நடக்கும் பாரிஸ் காமெடியில் சுதி கொஞ்சம் குறைந்து விடுகிறது. பிறகு சாயீஷா கடத்தப்பட்டவுடன் திரைக்கதையில் இன்னொரு முடிச்சு போடப்படுகிறது. இதை எப்படி அவிழ்க்கப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுத்தாலும், அதை பல லாஜிக் மீறல்களோடு இயக்குநர் கோகுல் அவிழ்த்து விடுகிறார் சப்புனு போய்விடுகிறது.
படம் ரொம்ப நீளமாக இருப்பது போல தோன்றினாலும், இந்த கதையை இரண்டரை மணி நேர படமாக கட் பண்ண எடிட்டர் சாபு ஜோசப்பை பாராட்டியாக வேண்டும். அதேபோல், ஒளிப்பதிவாளர் டட்லி, இசையமைப்பாளர் சித்தார்த் விபின் ஆகியோரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி படம் என்றாலே ரசிகர்கள் எதை எதிர்ப்பார்ப்பார்களோ அதை நிறைவாகவே இயக்குநர் கொடுத்திருந்தாலும், விஜய் சேதுபதியை அதிகமாக பேச வைத்திருப்பது பல இடங்களில் சலிப்படைய செய்கிறது. இருந்தாலும், தான் அதிகமாக பேசுவதை உணரும் விஜய் சேதுபதி அதை காமெடியாக மாற்றி ரசிகர்களை சிரிக்க வைத்து விடுகிறார்.
மொத்தத்தில், இந்த ‘ஜுங்கா’ விஜய் சேதுபதியின் ரசிகர்களை திருப்திப்படுத்துவதோடு, பெரிய காமெடி கலாட்டாவாகவும் இருக்கிறது.
0 comments:
Post a Comment